சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்து வரும் நிலையில், செப்டம்பர் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் உள்ளதா.? பார்க்கலாம்.

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.51.50 குறைப்பு

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தீர்மானித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றன.

அந்த வகையில், இன்று செப்டம்பர் 1ம் தேதி என்பதால் வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பட்டு சிலிண்டர்களின் விலை 51 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த மாதம் ஆயிரத்து 789 ரூபாய்க்கு விற்பனையான வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 51 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்ட, தற்போது ஆயிரத்து 737 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் 1,580 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 1,684 ரூபாய்க்கும், மும்பையில் ரூ.1,531.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டி உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

இந்நிலையில், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, கடந்த மாதம் விற்பனையாகிவந்த 868 ரூபாய் 50 காசுகள் என்ற அதே விலையில் நீடிக்கிறது.

மாதத்தில் தொடக்கத்திலேயே, வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைக்கப்படாவிட்டாலும், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகவே உள்ளது.