கடந்த 2022 ம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளை கைப்பற்றியது. அதில், 73 வார்டுகளில் திமுக நேரடியாக வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் 9 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா 4 வார்டுகளிலும், மதிமுக 3 வார்டுகளிலும், கொமதேக 2 வார்டுகளிலும், மமக 1 வார்டிலும் வெற்றி பெற்றது.


அதிமுக 3 வார்டுகளிலும், எஸ்.டி.பி.ஐ 1 வார்டிலும் வெற்றி பெற்றது. பின்னர், திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட கல்பனா ஆனந்தகுமார், மேயர் பதவிக்கு ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் கோவை மாநகராட்சியின் ஆறாவது மேயர் மற்றும் முதல் பெண் மேயர் என்ற பெருமையை கல்பனா பெற்றார்.


இதேபோல திமுகவின் முதல் மேயர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான கல்பனா ஆனந்தகுமார், மணியகாரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர். 42 வயதான இவர், கோவை மாநகராட்சி 19 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று, முதல் முறையாக மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.


கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார். அப்பகுதி திமுக பொறுப்பாளராக உள்ளார். எளிய குடும்ப பின்னணியை சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார், அப்பகுதியில் இ -சேவை மையம் நடத்தி வந்தார். கோவை மாநகராட்சி மேயராக பலரும் போட்டியிட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் அவருக்கு மேயர் பதவி கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


தொடர் சர்ச்சை, மோதல்கள்: கல்பனா ஆனந்தகுமார் மேயராக பொறுப்பெற்ற பின்னர், அவரது செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என புகார்கள் வந்தன. அதேபோல தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கி வந்தார்.


ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மேயர் பங்களாவில் ஒரு கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகளை செய்ததும், பின்னர் அமானுஷய பயம் காரணமாக அப்பங்களாவில் தங்காமல் விட்டதும் சர்ச்சையாக வெடித்தது.


மணியகாரன்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே வசிக்கும் சரண்யாவை காலி செய்ய வைக்க தொடர்ச்சியாக பல்வேறு தொல்லைகள் கொடுத்து வந்ததாகவும், வீட்டை காலி செய்ய வைப்பதற்காக அழுகிய பொருட்களை வீசுவதாகவும், சமையலறை அருகில் சிறுநீரை பிடித்து ஊற்றுவதாகவும் புகார் எழுந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறை சென்ற போது, சில ஆவணங்களை கல்பனாவின் தம்பி குமார் எரித்தாகவும் புகார் எழுந்தது. பல்வேறு இடங்களில் கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் பணம் கேட்டதாகவும், ஒப்பந்தாரர்களிடம் மேயர் கல்பனா கமிசன் கேட்டதாகவும் புகார்கள் வந்தன.


செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான கல்பனா ஆனந்தகுமாருக்கும், அமைச்சரான கே.என். நேருவிற்கும் இடையே மோதல்கள் இருந்து வந்தன. அதேபோல திமுக கவுன்சிலர்களை அரவணைத்து செல்லாததால், கவுன்சிலர்கள் மேயர் கல்பனா எதிர்ப்பு மனநிலைக்கு சென்றனர்.


மாநகராட்சி மண்டலத்தில் இருந்து அனுப்பப்படும் கோப்புகள் அனைத்தையும் மேயர் கல்பனா உள்நோக்கத்துடன் நிறுத்தி வைப்பதாகவும், தனிபட்ட வன்மத்துடன் மேயர் கல்பனா செயல்படுவதாகவும் மத்திய மண்டல தலைவர் மீனாலோகு குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் அதிகாரிகளுடன் மோதல் போக்கை கடைபிடித்தாகவும் கூறப்படுகிறது. இதனால் கோவை மாநகராட்சி மேயரை மாற்ற வேண்டுமென திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து புகார்கள் அளித்து வந்தனர்.


மேயர் பதவி ராஜினாமா: கல்பனா ஆனந்தகுமாருக்கு மக்கள் மத்தியிலும், கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் செல்வாக்கு இல்லாமல் இருந்தது. மேலும் அவரது செயல்பாடுகள் பலருக்கும் அதிருப்தியை தந்தது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அவர் போதியளவு பணியாற்றவில்லை எனவும், அவரது வார்டிலேயே பாஜக கூடுதல் வாக்குகள் வாங்கியதாகவும் புகார்கள் எழுந்தன.


இதனிடையே கடந்த சில நாட்களாகவே கல்பனா ஆனந்தகுமாரிடம் கட்சி தலைமை ராஜினாமா கடிதம் வாங்கியதகவும், அவர் பதவி விலக உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில், இன்று கல்பனா ஆனந்தகுமார் மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.


தனது பதவி விலகல் கடிதத்தை கல்பனா தரப்பினர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகனிடம் வழங்கினர். மேயர் பதவியில் இருந்து கல்பனா ஆனந்தகுமார் விலகிய சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.