கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்தி வெளியான சில நாட்களிலேயே, அதே கோவையில் பெண் ஒருவர் காரில் கடத்தப்படுவது போன்ற சிசிடிவி வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த வழக்கில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அது குறித்து தற்போது பார்க்கலாம்.
பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி - கண்டனம் தெரிவித்த இபிஎஸ்
கோவையில் சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் காரில் கடத்தப்படுவது போன்ற சிசிடிவி காட்சிகள் செய்திகளில் வெளியானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வந்தன.
கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்தி வந்த மூன்றாவது நாளே, அதே கோவையில், பெண் கடத்தப்படும் சிசிடிவி காட்சி வெளிவருவது, திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட சட்டத்தின் மீதோ, காவல்துறை நடவடிக்கை மீதோ அச்சமே இல்லை என்பதையே காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.
மேலும், சென்னை கண்ணகி நகரில் 6-ம் வகுப்பு மாணவி ஒருவர் மாயமாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன என தெரிவித்த அவர், திமுக ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளை பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக Compromise செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.
எந்த நேரத்திலும், எங்கும் பெண்களால் நிம்மதியாக, பாதுகாப்பாக இருக்க முடியாத ஒரு பதற்றமான நிலையை உருவாக்கிவிட்டு, இந்த அரசை "பெண்களுக்கான அரசு" என்று கூறுவதற்கு பொம்மை முதல்வரும், அவரது மகனும் கூச்சப்பட வேண்டும் என்றும் கடுமையாக விமர்சித்தார்.
மேற்கூறிய சம்பவங்கள் குறித்து உரிய விசாரணையை துரிதப்படுத்தி, பெண்களை கண்டுபிடித்து, குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
பெண் கடத்தலில் நடந்த திருப்பம் - வீடியோ வெளியிட்ட காவல்துறை
இந்த நிலையில், கோவையில் அந்த குறிப்பிட்ட பெண் கடத்தப்படவே இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆம், அந்த பெண்ணின் விளக்க வீடியோவை தான் காவல்துறையினர் வெளியிட்டனர். அதில், அந்த பெண், தன் கணவருடன் சென்று சுடிதார் தைப்பதற்காக கொடுத்துவிட்டு வந்ததாகவும், பின்னர் பேக்கரிக்கு சென்று டீ சாப்பிட்டுவிட்டு காரில் சென்று கொண்டிருந்தபோது, கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக காரில் இருந்து இறங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
அப்போது, வீட்டிற்கு வர முடியாது என்றும், தாய் வீட்டிற்கு கிளம்பிச் செல்கிறேன் என்றும் அந்த பெண் கூறியதாகவும், அதனால் பெரிய பிரச்னை ஏற்படும் என்று கருதி, கணவரும், மகனும் சேர்ந்து காருக்குள் தன்னை காருக்குள் இழுத்து ஏற்றிச் சென்றதாகவும் கூறியுள்ளார்.
மேலும், காருக்குள் இருந்த கணவர் தன்னை அடித்ததாகவும், பதிலுக்கு தானும் கணவரை அடித்ததாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். இதனால், தான் கடத்தப்படவில்லை என்றும், குடும்பத் தகராறில் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அந்த பெண் விளக்கமளித்துள்ளார்.