கோவை கல்லூரி மாணவி பாலியல் சம்பவம்
கோவையில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி தனது ஆண் நண்பரோடு தனிமையில் பேசிக்கொண்டிருந்து கல்லூரி மாணவியை மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்தது. இரவு சுமார் 10 மணியளவில், கோவை சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் கல்லூரி மாணவியோடு இருந்த ஆண் நண்பரை 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாக்கி மாணவியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக ஆண் நண்பர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பல மணி நேர தேடுதலுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மாணவியை காயங்களோடு மீட்டனர்.
குற்றவாளிகள் புகைப்படம் வெளியானது
பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த குணா என்கிற தவசி (28), சதீஷ் என்கிற கருப்பசாமி (29), கார்த்திக் என்கிற காளிஸ்வரன் (27)) ஆகியோரை போலீசார் சுட்டு பிடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெறு வந்த நிலையில் குற்றவாளிகளின் புகைப்படத்தை போலீசார் வெளியிடாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் சுமார் ஒரு மாதங்களுக்கு பிறகு கோவை குற்றவாளிகள் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும் கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான மூன்று பேர் மீது 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் குற்ற சம்பவம் தொடர்பாக 400 பக்க ஆவணங்களும் இணைக்கப்பட்டு உள்ளன. மேலும் 13 சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. குற்றப்பத்திரிக்கையில் முதல் குற்றவாளியாக கருப்புசாமியும், இரண்டாவது குற்றவாளியாக அவரது தம்பி கார்த்திக்கையும், மூன்றாவது குற்றவாளியாக தவசியையும் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதனிடையே பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்ற தினத்தில் காலையில் ஆடு மேய்க்கும் தொழிலாளியை அடித்து கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொழிலாளியை கொலை செய்த குற்றவாளிகள்
கோவை குரும்பபாளையத்தை சேர்ந்த தேவராஜ் கடந்த மாதம் இரண்டாம் தேதி செரப்பாளையம் பகுதியில் உள்ள காட்டில் ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தார். அப்போது சதீஷ், கார்த்திக் மற்றும் தவசி ஆகியோர் மது குடித்துள்ளனர். இதை பார்த்த தேவராஜ் மது குடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறு ஆத்திரம் அடைந்த 3 பேரும் கட்டையால் தேவராஜை அடித்து கொலை செய்து உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.