கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் ஆதரவாளர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது.
பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும் கோவை சிறையில் இருந்து, சென்னை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கோவை சிறையில் இருந்த 6 பேரும் பாதுகாப்புடன் சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்டனர். 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை செய்ய என்.ஐ.ஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, கோவை சிறையில் இருந்த 6 பேரும், இன்று சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில், 6 பேரையும் வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் என்.ஐ.ஏ மீண்டும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பில் இருந்தவர்கள், தடை செய்யப்பட்ட அமைப்புகளின் ஆதரவாளர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் புதுப்பேட்டை, பெரம்பூர், ஜமாலியா, மண்ணடி ஆகிய பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
புதுப்பேட்டை திருவேங்கடம் தெருவில் உள்ள முகமது நிசாமுதீன் என்பவரின் இல்லத்தில் காலை 4:30 மணியிலிருந்து தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டு விசாரணைக்கு அழைத்து சென்றனர். இவர் புதுப்பேட்டை பகுதியில் பழைய கார்கள், பைக்குகள், விற்கும் கடை மற்றும் ஸ்கிராப் நிலையம் வைத்திருப்பதாக தெரிவித்தார். என்ஐஏ அதிகாரிகள் அவரை மூன்று மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தி நிஜாமுதீனின் கைப்பேசி, சிம்கார்டு போன்றவற்றை பறிமுதல் செய்துவிட்டு அவரை திரும்பி அனுப்பி வைத்ததார்கள் என முகமது நிஜாமுதீன் தெரிவித்தார்.