Vande Bharat Rail: கோவை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் நேரம் மார்ச் 11ஆம் தேதி முதல் மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


கோவை - பெங்களூர் வந்தே பாரத் ரயில்


இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள்  இயக்கப்பட்டு வருகிறது.


இந்த வந்தே பாரத் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகினறன. தமிழ்நாட்டை பொறுத்தவரை, சென்னை - கோவை, சென்னை -  நெல்லை, சென்னை இருந்து பெங்களூர் வழியாக மைசூர், கோவை - பெங்களூரு என மொத்த நான்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 


கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் அதிகாலை 5.00  மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, காலை 11.30 மணிக்கு பெங்களூருவுக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், பெங்களூருவில் இருந்து பகல் 1.40 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 8.00 மணிக்கு கோவைக்கு வந்தடையும்.   இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஓசூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


நேரம் மாற்றம்:


இந்த நிலையில், கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேரத்தை மார்ச் 11ஆம் தேதி முதல் மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட  அறிவிப்பில், "கோவை - பெங்களூரு இடையே இயக்கப்படும் (20642) வந்தே பாரத் ரயில் நேரம் மாற்றம் செய்யப்படுகிறது.






வரும் மார்ச் 11ஆம் தேதி முதல் காலை 7.25 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில், காலை 8.03 மணிக்கு திருப்பூர், 8.42 மணிக்கு ஈரோடு, 9.32 மணிக்கு சேலம், 10.51 மணிக்கு தருமபுரி, நண்பகல் 12.03 மணிக்கு ஒசூர், பகல் 1.50 மணிக்கு பெங்களூருவுக்கு சென்றடையும். 


மறுமார்க்கத்தில், பெங்களூருவில் இருந்து பகல் 2.20 மணிக்கு புறப்படும் ரயில், ஒசூரில் 3.10 மணிக்கு, தருமபுரியில் 4.22 மணிக்கு, சேலத்தில் 5.57 மணிக்கு, ஈரோடில் 6.47 மணிக்கு, திருப்பூர் 7.31 மணிக்கு, கோவை 8.45 மணிக்கு வந்து சேரும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


கோவையில்  இருந்து வந்தே பாரத் ரயில் காலை 5 மணிக்கு புறப்படுவதால் வீட்டில் இருந்து ரயில் நிலையம் வர சிரமமாக இருப்பதாகவும், இதனால் புறப்படும் நேரத்தை மாற்ற வேண்டும் என்று மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  இந்த கோரிக்கையை பரிசீலித்த தெற்கு ரயில்வே, கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேரத்தை மாற்றியமைக்க ஒப்புக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.