தமிழ்நாட்டில் புதியதாக அமைந்துள்ள தவெக அரசு மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. செங்கோட்டையன் தவிர முதலமைச்சர் விஜய் உள்பட அனைவரும் புதியவர்கள் என்பதால் அவர்களின் செயல்பாடு எப்படி இருக்கப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Continues below advertisement

நகராட்சித்துறை:

தமிழ்நாட்டின் முக்கியமான துறைகளில் ஒன்றாக திகழ்வது நகராட்சித்துறை. மாநிலத்தின் வளர்ச்சியை தீர்மானிக்கும் மிகப்பெரிய பங்களிப்பு இந்த துறையின் வசமே உள்ளது. மாநிலத்தில் உள்ள 25 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளை அடக்கிய இந்த துறையில் கடந்த கால ஆட்சியில் ஊழல் கரைபுரண்டு ஓடியதாக பெரும் குற்றச்சாட்டு உள்ளது.

தயாராகும் பட்டியல்:

நடப்பு ஆட்சியில் இந்த துறையை முதலமைச்சர் விஜய்யே தன்வசம் வைத்துள்ளார்.  இந்த துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை முதலமைச்சர் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட நகராட்சியின் ஒவ்வொரு அமைப்பிலும் அதிகளவு லஞ்சம் பெறும் அதிகாரிகளின் பட்டியலை தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Continues below advertisement

லஞ்சம் பெறுபவர்கள் யார்? யார்? அந்த லஞ்சப் பணம் எங்கே செல்கிறது? என்ற முழு பட்டியலையும் உளவுத்துறை போலீசார் உதவியுடன் அவர் சேகரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.  அரசு அதிகாரிகளைப் பொறுத்தமட்டில் நகராட்சித்துறையில் ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றக்கூடாது என்ற சட்டம் உள்ளது. 

ஆனால், ஒரே இடத்தைச் சுற்றி பணியிட மாறுதல் பெற்று பலர் கல்லா கட்டி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இதுபோன்ற அதிகாரிகளை அடையாளம் கண்டு பணியிடம் மாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

விரைவில் நடவடிக்கை:

தனது ஆட்சியில் ஊழல் இருக்கவே கூடாது என்பதில் மிகவும் திட்டவட்டமாக இருக்கும் விஜய் அமைச்சர்களும் தவறு செய்யக்கூடாது, அமைச்சர்கள் தங்களுக்கு கீழே இருப்பவர்களும் தவறு செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் தற்போது நகராட்சித்துறையில் ஊழலில் புரையோடிப் போனவர்களின் பட்டியலை எடுக்க உத்தரவிட்டிருப்பதால் ஊழல் அதிகாரிகள் ஆடிப்போகியுள்ளனர். இந்த பட்டியலில் முதலமைச்சர் வசம் சென்றதும் விரைவில் அந்த ஊழல் அதிகாரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

நகராட்சித்துறை மட்டுமின்றி அதிகளவு பணப்புழக்கம் கொண்ட பத்திரப்பதிவுத்துறை போன்ற மற்ற துறைகளிலும் இதுபோன்ற ஊழலை கட்டுப்படுத்த முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ஊழலைக் கட்டுப்படுத்துவதையே முதன்மையாக கொண்டு செயல்பட அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் இந்த உத்தரவு முழுமையாக செயல்பட்டால் கீழ்மட்ட மக்கள் மிகப்பெரிய அளவில் பயன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.