சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அறிவாலயம் குறித்து பேசியிருந்தார். அவரது அந்த பேச்சுக்கான பதிலடியுடன், திமுக தொண்டர்களுக்கு அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அறிவாலயம் குறித்து பேசிய அண்ணாமலை
திமுகவிற்கு வெற்றி கிடைக்க வேண்டுமென்றால், தமிழ்நாட்டிற்கு ஆளுநராக ஆர்.என். ரவியே இருக்க வேண்டும் என்றும், பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் பேசியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாஜக கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணாமலை, முதலமைச்சரின் பேச்சு ஆணவத்தின் உச்சம் என்று சாடினார். மேலும், அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் உருவி எடுக்கும் வரை நான் இங்கேயேதான் இருப்பேன் என்று கூறினார். திமுகவின் அமைச்சர்கள் அனைவரும் ஊழல் பெருச்சாலிகள் என்று விமர்சித்த அண்ணாமலை, 2026-ல் அவர்கள் சிறை செல்வதை பார்ப்பதற்கு இங்கேயேதான் இருப்பேன் என்றும் பேசினார்.
அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த மு.க. ஸ்டாலின்
பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு, தனது கடிதத்தில் பதிலடி கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ”நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்ட கழகத்தின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், உடன்பிறப்புகளின் உழைப்பு எனும் அடித்தளத்தில் இன்றளவும் வலிமையாக திகழ்கிறது” என்றும் அதனால் அது எதிரிகளின் கண்களை உறுத்துகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ”முத்தமிழறிஞர் கலைஞரின் சிந்தனையிலும் செயலிலும் உருவான கழகத்தின் கற்கோட்டையான அறிவாலயத்திலிருந்து செங்கலை உருவலாம் எனக் கனவு காண்பவர்கள், தரையில் விழுந்து தலையில் அடிபட்டபின், கனவு கலைந்து விழித்துக் கொள்ளலாமே தவிர, அறிவாலயத்தின் ஒரு துகளைக் கூட எவராலும் அசைக்க முடியாது என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருமை மிக்க வரலாறு” என கூறியுள்ளார்.