ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் நிலையில், ஆக.13ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், அமைச்சர்கள் யாரேனும் மாற்றப்படுவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. 


உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடர்ச்சியாக முதலீடுகளை ஈர்க்க முதல்வர் அமெரிக்கா செல்ல உள்ள சூழலில், இதுகுறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. 


அமெரிக்காவுக்குப் பறக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்


தமிழ்நாட்டிற்கான முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் ஸ்டாலின், அமெரிக்கா செல்வார் என ஏற்கனவே தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், ஜூலை மாதமே முதல்வர் அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் பயணம் ஒத்தி வைக்கப்பட்டு, ஆகஸ்ட் 27ஆம் தேதி ஸ்டாலின் அமெரிக்கா புறப்படுகிறார். 


15 நாட்கள் பயணமா?


முதலமைச்சர் ஸ்டாலினின் பயணம் சுமார் 15 நாட்கள் வரை நீடிக்கும் என கூறப்படுகிறது. தலைமை செயலாளர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட முக்கிய அதிகாரிகள் முதலமைச்சர் உடன் செல்ல உள்ளனர். பல்வேறு தொழில்நிறுவனங்களைச் சேர்ந்த தலைமை நிர்வாகிகளை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, முதலமைச்சர் தனது உடல்நலன் தொடர்பான மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது. 


இந்த நிலையில் அமெரிக்கா செல்வதற்கு முன்னால், தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஆக.13ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. இதில், அமைச்சர்கள் யாரேனும் மாற்றப்படுவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. 


 துணை முதல்வர் நியமனம் இல்லை


முதலமைச்சரின் ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்தின்போதும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான தகவல்கள் வெளியாவது வழக்கமாக உள்ளது. அத்துடன் துணை முதல்வராக உதயநிதி நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படும். எனினும் இதுகுறித்து அண்மையில் விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வராக உதயநிதி நியமிக்கப்படுவது குறித்த கோரிக்கைகள் வலுத்திருக்கின்றன. ஆனால் பழுக்கவில்லை என்று கருணாநிதி பாணியில் பதிலளித்தார். இதனால், இந்த முறை துணை முதல்வர் நியமனம் இருக்க வாய்ப்பில்லை.


எந்தெந்த அமைச்சர்கள் மாற்றம்?


எனினும் அமைச்சர்களில் சிலர் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. போக்குவரத்து, மின்சாரத் துறை, ஆதிதிராவிடர் நலத்துறைகளில் மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மூத்த அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் (வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை), தங்கம் தென்னரசு (நிதித்துறை)  ஆகியோர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.