சென்னையில், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தின் ‘உலகம் உங்கள் கையில்‘ என்ற பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாணவர்களிடையே உரையாற்றினார். அவரது உரை குறித்து விரிவாக பார்க்கலாம்.

Continues below advertisement

நிகழ்ச்சியின் தலைப்பு குறித்து முதலமைச்சர் விளக்கம்

இந்த நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர், ‘உலகம் உங்கள் கையில்‘ என்ற தலைப்பை கொடுத்ததற்கு காரணம், இது வெறும் தலைப்பு அல்ல, அதுதான் உண்மை, எதிர்காலம் உங்கள் கையில் தான் உள்ளது. அதை உணர்த்தத் தான் இந்த தலைப்பு என்று கூறினார்.

மேலும், மாணவர்களை வளர்த்தெடுத்தால் தான் மாநிலம் வளரும். அதற்காகத் தான், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் தற்போது இந்த லேப்டாப் திட்டம் என்று கூறியதுடன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ந்து, உலகத்தை நம் கைகளுக்கு எட்டக்கூடிய தொலைவில் கொண்டுவந்துவிட்டது என்றும், அதை உங்கள்(மாணவர்கள்) கையில் கொண்டுவருவது தான் திராவிட மாடல் ஆட்சி என்றும் தெரிவித்தார்.

Continues below advertisement

“எதிர்காலத்திற்கான திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி“

மேலும், எதிர்காலம் கம்ப்யூட்டர் காலம் என்பதை உணர்ந்தே, ஐடி பாலிசி, டைடல் பார்க் போன்றவற்றை கொண்டுவந்தார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்றும், அதனால் தான், உலக அளவில் சாஃப்ட்வேர் துறையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பெரும் பதவிகளில் இருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார் முதலமைச்சர்.

அதோடு, தமிழர்கள் கடந்த கால பெருமையையும் பேசுவோம், எதிர்கால பெருமைக்காக உழைப்போம், ஒருபோதும் போலி பெருமைகளை பேசி தேங்கிவிட மாட்டோம் எனவும், அதற்கு உதாரணம் தான் இந்த விழா என்றும் தெரிவித்தார்.

“காலம் கொடுத்த இரண்டாவது நெருப்பு ஏஐ“

மனிதர்களுக்கு காலம் கொடுத்திருக்கும் இரண்டாவது நெருப்பு தான் ஏஐ என்று குறிப்பிட்ட முதலமைச்சர், இன்று உங்கள் கைகளுக்கு வந்திருக்கும் லேப்டாப், பரிசுப் பொருள் கிடையாது என்றும், உலகத்தை நீங்கள் ஆள்வதற்காக உங்கள் கைகளுக்கு வந்திருக்கும் வாய்ப்பு என்றும் மாணவர்களிடம் தெரிவித்தார்.

“மாணவர்கள் தங்களை அப்டேட் செய்துகொள்ள வேண்டும்“

தொடர்ந்து பேசிய அவர், இந்த அரசை பொருத்தவரை இது செலவு திட்டம் இல்லை என்றும், எதிர்கால தலைமுறையின் கல்வியில் செய்யப்படும் முதலீடு என்று கூறினார். எல்லா துறைகளிலும் நிறைய வளர்ச்சிகள் வந்திருப்பதாகவும், வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாணவர்கள் தங்களையும் அப்டேட் செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். இனிமேல், தொழில்நுட்பத்தை படிப்பது ஆப்ஷன் கிடையாது, அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மாணவர்களுக்கு முதலமைச்சர் கேள்வி

மேலும், தற்போது உங்கள் கைகளுக்கு வந்திருக்கும் லேப்டாப்பை, படம் பார்ப்பதற்கும், கேம்ஸ் விளையாடுவதற்கும் பயன்படுத்தப் போகிறீர்களா.? அல்லது, உங்கள் கேரியருக்கான லாஞ்ச் பேடாக பயன்படுத்தப் போகிறீர்களா என்ற கேள்வியை மாணவர்கள் முன் வைப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

“உலகத்தோடு போட்டி போடுங்கள், அதற்கான கருவியைத் தான் உங்களுக்கு தற்போது கொடுத்துள்ளோம். எதைப் பற்றியும் கவலைப்படாமல் படிங்க.. படிங்க.. படிங்க..“ என்றும், “உங்களை பார்த்துக் கொள்வதற்கு நான் இருக்கிறேன், உங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்ள திராவிட மாடல் அரசு இருக்கிறது“ என்றும் முதலமைச்சர் கூறினார்.

“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“

மேலும், உலக பத்திரிகையே தமிழ்நாட்டை சூப்பர் ஸ்டார் என்று சொல்வதாகவும், ஆனால், அதெல்லாம் போதாது, இன்னும் வளர்ச்சி வேண்டும் என்றும் கூறிய முதலமைச்சர், தமிழ்நாடே உங்களை(மாணவர்கள்) நம்பித் தான் உள்ளது, உலகம் உங்கள் கையில் உள்ளது.. ஜெயித்து வாருங்கள், நீங்களும் ஜெயித்து வாருங்கள், நாங்களும் ஜெயித்து வருகிறோம் என்று கூறினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.