தமிழகத்தில் மது விற்பனை
நாளுக்கு நாள் மது விற்பனை தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. நவ நாகரீக உலகில் மது குடிப்பதை பேஷனாகவே மாற்றிவிட்னர். இதன் காரணமாக பார்ட்டி என்று வந்தாலே அங்கு மதுவிற்கு முக்கிய இடம் ஒதுக்கப்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் சுமார் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூலம் தமிழகத்தில் மது விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக தமிழக அரசுக்கு நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு மது வருவாய் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் மது விற்பனை ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், காலி மதுபான பாட்டில்கள் வயல்களில், பூங்காக்களில், சாலைகளில் மற்றும் பொது இடங்களில் வீசப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் விலங்குகள் கால்களில் காயம் ஏற்படும் நிலை உருவானது. இதனையடுத்து காலி மதுபான பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் 10 ரூபாய் வழங்கும் திட்டம் முதல் கட்டமாக நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதியில் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகம் முழுவதும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
நாளை முதல் சென்னையில் புதிய திட்டம்
அந்த வகையில் சென்னையில் நாளை முதல் அமல்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அவற்றை மதுபானக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டத்தின்படி, மதுபாட்டில்களை வாங்கும் போது மதுபாட்டில் ஒன்றுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெற்று மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களைத் திரும்ப அதே மதுபான விற்பனைக் கடையில் ஒப்படைக்கும் திட்டம் நாளை முதல் சென்னையில் செயல்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது பாட்டிலுக்கு 10 ரூபாய்
அந்த வகையில், ஏற்கனவே செலுத்திய ரூ.10/-ஐ பாட்டிலை ஒப்படைத்து விட்டு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நாளை (06-01-2026) முதல் அமல்படத்தப்பட உள்ளதாகவும் இத்திட்டத்தின் நோக்கம். காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.