இந்திய கட்டுமான நிறுவனங்கள் நடத்தும் வீடு, மனை விற்பனை தொடர்பான கண்காட்சியை, சென்னை நந்தம்பாக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அனைத்து துறைகளிலும் மாபெரும் வளர்ச்சி:
பின்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழ்நாடு அரசு இதுவரை இல்லாத அளவிற்கு அனைத்து துறைகளிலும் மாபெரும் வளர்ச்சியை கண்டு வருகிறது. தமிழ்நாட்டை நோக்கி பல்வேறு நிறுவனங்கள் அணிவகுத்து வருவதே இதற்கு சாட்சியாக உள்ளது. அவற்றை வரவேற்பதற்கான உட்கட்டமைப்பையும் அரசு ஏற்படுத்தி வருகிறது. புதிய புதிய தொழில் கொள்கைகளையும் அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ரியல் எஸ்டேட் தொழில்நுட்ப கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
குறைந்த வருவாயினருக்கும் வீடு:
நாகரிக மனிதருக்கான அடிப்படையான வீட்டு வசதியினை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏற்படுத்தி தரும் முயற்சியை அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களுக்கு மிகவும் தேவையான வீட்டு வசதியை அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், கிராம மற்றும் நகர்ப்புற வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். குறைந்த வருவாய் கொண்ட பிரிவினருக்கும், வீட்டு வசதி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
துணைக்கோள் நகரங்கள் உருவாக்கப்படும்:
குடிசைகள் இல்லா நகரங்களை உருவாக்க இந்தியாவிலேயே முதன்முறையாக, குடிசை வாழ் மக்களின் வீட்டு வசதிக்காக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை, 50 ஆண்டுகளுக்கு முன்பே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவாக்கினார். தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 49 சதவீதம் மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர்.
நகரமயமாதலில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக உள்ளது. பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் குடியேற்றம் ஆகிய காரணங்களால், நகரங்களில் ஏற்படும் விரைவான வளர்ச்சியால்தான் பெருநகரங்கள் ஏற்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு நகர்ப்புற வளர்ச்சிக்கான பல்வேறு கொள்கைகளை வகுத்து நடைமுறைப்படுத்தி வருவதோடு, பல்வேறு வீட்டு வசதி திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சியில் எந்தவொரு தனிநபரையும் விட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நபரையும் உள்ளடக்கி வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறோம்
2030ல் இலக்கு
2030 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் போதுமான, பாதுகாப்பான வாங்கும் திறனுக்கு ஏற்ற வீடுகளையும் அடிப்படை வசதிகளையும் அளித்தல், குடிசை பகுதிகள் மற்றும் நகரமயமாதலை மேம்படுத்துதல், நகரங்கள், புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்துதல் ஆகிய குறிக்கோள்களை வைத்துள்ளோம். புதிய துணைக்கோள் நகரங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
துணைக்கோள் நகரம் என்றால் என்ன?
மக்கள் தொகை அடிப்படையில் தனிகவனம் செலுத்தி மேம்படுத்தப்படும் குறிப்பிட்ட பகுதியை துணைக்கோள் நகரம் என குறிப்பிடுகின்றனர். அந்த பகுதியில் சாலைகள், குடிநீர், கழிவுநீர் வெளியேற்றம், மழைநீர் கால்வாய், சிறு பாலங்கள் மற்றும் தெரு விளக்குகள் ஆகிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். அதோடு, பள்ளி வளாகம், வணிக மனைகள், காவல் நிலையம், அஞ்சலகம், ஆரம்ப சுகாதார நிலையம், தீயணைப்பு நிலையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் மனைகள் என அனைத்து வசதிகளும் அடங்கும்.