CM Stalin Speech: நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா..?  மக்களாட்சி நீடிக்குமா..? என்ற நிலையே இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 


சென்னை திருவான்மியூரில் திமுக எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி இல்ல திருமண விழா நடைபெற்றது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர், விழாவில் பேசிய அவர் எதிர்கட்சி தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்பது குறித்து விமர்சித்துள்ளார். மேடையில் பேசிய முதலமைச்சர், ”இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது, எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டபோது ஆட்சியை விட ஜனநாயகத்திற்கே ஆதரவு என கூறியவர் கலைஞர். அவர் எங்களுக்கு ஆட்சியை ஜனநாயகத்திற்கே ஆதரவு என கூறியதால், அந்த வழியில் ஆட்சியை விட ஜனநாயகத்திற்கே திமுக ஆதரவு வழங்கும். 


இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சியை எதிர்க்க கூடாது என தூது வந்தது. அப்போது பேசிய கலைஞர் நாங்கள் ஆட்சிக்காக இல்லை, ஜனநாயகத்தை நம்பி உள்ளோம். உயிரே போனாலும் எமர்ஜென்சியை எதிர்த்து நிற்போம் என்றார். ஆனால், தற்போது நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா ?  மக்களாட்சி நீடிக்குமா ? என்ற நிலை உள்ளது. 


மத்தியில் ஆளும் பாஜக அரசு எதிர்கட்சிகளை மிரட்டுவது, எதிராக கருத்து கூறுபவர்களை அமலாக்கத்துறை சோதனை மூலம் அச்சுறுத்துவது உள்ளிட்ட செயல்களை கொண்டுள்ளது. இப்போது எதிர்கட்சி தலைவர்களின் செல்போன் ஒட்டு கேட்பதும் அரங்கேறி வருகிறது. செல்போன் ஒட்டு கேட்பு தொடர்பாக ஆப்பிள் நிறுவனமே எதிர்கட்சி தலைவர்களை எச்சரித்துள்ளது. இதெல்லாம், பாஜகவின் தோல்வி பயத்தையே காட்டுகிறது.


பாஜகவுக்கு தோல்வியளிக்க இணைந்துள்ள ’இந்தியா’ கூட்டணி அவர்கள் எதிர்பாராத வகையில் மக்களிடம் சென்று மோடி ஆட்சியின் கொடுமைகளை கூறுகிறது. நடைபெற உள்ள 5 மாநிலங்களில் பாஜக தோல்வியை தழுவும் என்ற செய்தியே வந்து கொண்டிருக்கிறது. இந்தியாவை காப்பாற்றுவதற்கு, நல்ல ஆட்சி நடைபெற ’இந்தியா’ கூட்டணிக்கு வெற்றியை தர வேண்டும் என கேட்டு கொள்கிறேன்” என பேசியுள்ளார். 


மேலும் படிக்க: Leo Success Meet: ஸ்கெட்ச் ஆடியோ லாஞ்ச்சில் இல்லை; சக்சஸ் மீட்டில்! குட்டிக்கதையில் அரசியலுக்கு அச்சாரமிடுவாரா விஜய்?


PM Modi TN Visit: டிசம்பர் மாதம் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பயணத்திட்டம் என்ன?