முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான செங்கோட்டையன் இன்று திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அதற்கு முன்னர், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது பயணம் தொடர்பாக கூறியது என்ன தெரியுமா.? வாருங்கள் பார்க்கலாம்.

“ராமரை தரிசிக்க பயணம் - நாளை முக்கிய அறிவிப்பு இல்லை“

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை என்றும், அனைவரும் ஒன்றாக வேண்டும், கட்சி வளர வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் உறுதிபடக் கூறினார்.

டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்க செல்கிறாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், தான் ஹரித்துவார் சென்று ராமரை தரிசனம் செய்வதற்காக செல்வதாகவும், அப்படி செய்தால் தனது மனதிற்கு ஆறுதலாக இருக்கும் என்பதால், டெல்லி சென்று அங்கிருந்து ஹரித்துவார் செல்வதாக கூறினார். மேலும், பாஜக தலைவர்களை சந்திக்க தான் டெல்லி செல்லவில்லை என்றும் விளக்கமளித்தார்.

அதேபோல், நாளை எந்த முக்கிய அறிவிப்பையும் வெளியிடப் போவத்தில்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்துள்ள செங்கோட்டையன்

எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், கடந்த 5-ம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி சில மாதங்களுக்கு முன்னர் தனது தலைமையில் நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், சிவி. சண்முகம் ஆகிய 6 பேர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வலியுறுத்தியதாக தெரிவித்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திலும் மனநிலையிலும் இல்லையென்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்த செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியே வந்த நிலையில், அப்படி யாரும் என்னை சந்திக்கவில்லை, எதுவும் வலியுறுத்தவில்லையென்று எடப்பாடி பழனிசாமி மறுத்த நிலையில், அது உண்மைதான் என்பதை செங்கோட்டையன் தன்னுடைய பத்திரிகையாளர் சந்திப்பில் போட்டு உடைத்தார். மேலும், தனக்கு 2 வாய்ப்புகள் வந்தபோதும் அதை கட்சிக்காக தான் விட்டுக்கொடுத்ததாகவும் தெரிவித்த அவர், கட்சி மீண்டும் ஆட்சியில் அமர வேண்டுமென்றால், பிரிந்து சென்ற அனைவரும் கட்சியில் சேர்க்கப்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தினார்.

தற்போதைய சூழலில், வரும் 2026 தேர்தலில் அதிமுகவால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது என்றும், பிரிந்து சென்ற அனைவரும், அதாவது, சசிகலா, தினகரன், ஒபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இணைத்து களம் கண்டால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடிவும் என்பதையும் செங்கோட்டையன் உறுதியாக தெரிவித்தார். 

அதோடு, பிரிந்து சென்றவர்களை கட்சியில் மீண்டும் இணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்தார். அப்படி இணைக்க முயற்சி எடுக்கவில்லையென்றால், கட்சி ஒன்றிணைய வேண்டும் என்ற மனநிலை கொண்ட அனைவரும் ஒன்று சேர்ந்து, பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் பணிகளை செய்து முடிப்போம் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் சவால் விடுத்தார்.

இந்த பேட்டிக்கு அடுத்த நாளே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது அவர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளது முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.