ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியில் டாடா நிறுவனத்தின் புதிய கார் தொழிற்சாலை அமைய உள்ளது. இதன் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மொத்த மின் வாகனங்களில், 40 விழுக்காடு தமிழ்நாட்டில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது என்றார். 


தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, உலகின் பெரிய நிறுவனங்களுக்கும் தமிழ்நாடுதான் முதல் முகவரியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் இங்கே இருப்பதால், நம்முடைய மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து வருகிறது.


"E-Vehicle-களின் தலைநகரம்"


இந்த நல்லுறவு மென்மேலும் வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதிவிரைவாக வளர்ந்து கொண்டிருக்கின்ற தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் இன்று மிக முக்கியமான நாளாக இந்த நாள் விளங்கிக் கொண்டிருக்கிறது.


டாடா மோட்டார்ஸ் தன்னுடைய திட்டத்திற்காக, ராணிப்பேட்டை மாவட்டத்தை தேர்ந்தெடுத்தற்காக நான் முதலில் நன்றி சொல்கிறேன். ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ததுடன், ஐந்தாயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பும் அளிக்க இருக்கிறது.


உங்களுடைய நிறுவனங்கள் மூலமாக கூடுதல் முதலீடுகளை நீங்கள் தமிழ்நாட்டில் செய்யவேண்டும். செய்து கொண்டிருக்கிறீர்கள். அதை நான் மறுக்கவில்லை; அது உங்கள் கடமை. ஏனென்றால், இது என் மாநிலம் அல்ல, உங்கள் மாநிலம் அல்ல; நம்முடைய மாநிலம். இது உங்களுடைய மாநிலம்.


இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் நான் பகிர்ந்துகொள்ள விரும்புறேன். 1973-ஆம் ஆண்டு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இதே ராணிப்பேட்டையில்தான் முதல் சிப்காட்டை தொடங்கினார். ஐம்பது ஆண்டுகள் கடந்து, இங்கே பல்வேறு நிறுவனங்களை பார்ப்பது பெருமையாக இருக்கிறது.


தமிழ்நாடுதான் இந்தியாவின் வாகன உற்பத்தி தலைநகரம்! அதுமட்டுமல்ல, E-Vehicle-களின் தலைநகரம்.  ஃபோர்டு, ஹூண்டாய், ரெனோ நிஸான் என்று சர்வதேச வாகன நிறுவனங்களும் இங்கே இருக்கிறது. டாடா மாதிரி சர்வதேச மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்ற வாகனங்களை தயாரிக்கின்ற தொழிற்சாலையும் இங்கேதான் இருக்கிறது.


"தமிழ்நாடுதான் நம்பர் ஒன்"


கூடுதல் தகவல், இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மொத்த மின் வாகனங்களில், 40 விழுக்காடு தமிழ்நாட்டில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. அதுமட்டுமல்ல, எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் நம்பர் ஒன்!


நிதி ஆயோக் கொடுத்த ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டிலும் தமிழ்நாடுதான் நம்பர் ஒன் என்று குறிப்பிட்டிருக்கிறது! இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.


தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்தன்மை வாய்ந்தது. பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமூகநீதியை உள்ளடக்கிய வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமத்துவம் போன்ற கொள்கைகள் அடித்தளமாக கொண்ட ஒட்டுமொத்த வளர்ச்சி என்பதால், தமிழ்நாடு மற்ற மாநிலங்களிலிருந்து சற்று தனித்து இன்றைக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது" என்றார்.