விழுப்புரம்: விழுப்புரத்தில் வாங்கிய  கடனை திருப்பி கொடுக்காததால் தச்சு தொழிலாளியின் குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியேற்றி வீட்டுக்கு பூட்டு போட்ட இருவரை கந்து வட்டி வழக்கில் தாலுகா போலீசார் கைது செய்தனர்.


விழுப்புரத்தில் மீண்டும் கந்துவட்டி கொடுமை 


விழுப்புரம் அருகே கண்ணப்பன்நகரை சேர்ந்தவர் கொளஞ்சி மனைவி எழிலரசி(50). இவர் சாலாமேடு பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவரிடம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.50,000 பணத்தை 10 பைசா வட்டிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அதே மாதம் கண்ணப்பன்நகரை சேர்ந்த சுரேஷ் மனைவி புஷ்பாவிடம் ரூ.2 லட்சம் பணத்தை 10 பைசா வட்டிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.


தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக வட்டி கொடுக்க முடியாததால் சுந்தர், புஷ்பா ஆகியோர் சேர்ந்து எழிலரசி மற்றும் அவரது கணவர் கொளஞ்சி, மகன் கமல்ராஜ் ஆகியோரை அவர்களது வீட்டிற்கு வரவழைத்துள்ளனர். மேலும் அசலையும், வட்டியையும் கேட்டு திட்டி தாக்கியுள்ளார்.


இந்த வட்டி மற்றும் அசலை 10 நாட்களில் கொடுக்க வேண்டும் என்று கூறிய சுந்தர், எழிலரசிக்கு சொந்தமான கீழ் வீட்டை தன்னுடன் வேலை செய்யும் கணேசன் பெயருக்கு ரூ.4 லட்சம் அடமானம் பத்திரம் எழுதி வாங்கியுள்ளாராம். அதே போல் புஷ்பா மேல் வீட்டை ரூ.3 லட்சத்திற்கு எழிலரசியிடம் அடமானம் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டாராம்.


கந்துவட்டி கொடுமை செய்ததாக இருவர் கைது 


தொடர்ந்து அசலையும், வட்டியையும் கொடுக்காததால் எழிலரசி குடும்பத்தினரை வெளியே தள்ளி வீட்டை பூட்டியுள்ளார்கள். இது குறித்து எழிலரசி அளித்த புகாரின் பேரில் சுந்தர் (58), கணேசன் (63), சுரேஷ் மனைவி புஷ்பா (30) ஆகியோர் மீது கந்துவட்டி கொடுமை, பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர், கணேசனை கைது செய்தனர்.


'கந்து வட்டி'


கடன் தொகையில் குறிப்பிட்ட சதவிகிதத்தை (வட்டியை) முன்கூட்டியே பிடித்தம் செய்து கொண்டு மீதத்தைக் கொடுப்பது 'கந்து வட்டி' ஆகும். குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அசலைத் திரும்ப கொடுக்காத பட்சத்தில் கடனாளியை மென்மேலும் வட்டிச் சுழலுக்குள் இழுத்துச் சென்று விடும் அபாயம் மிகுந்தது கந்து வட்டியாகும்.