"கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்”
அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு நேரில் சென்று, நிவாரண பொருட்களை மக்களுக்கு இன்று முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
இதனையடுத்து, நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், ”கடந்த 19ஆம் தேதி இரவு பிரதமரை சந்தித்து வெள்ள பாதிப்புக்கு தேவைப்படும் நிவாரண நிதியை உடனே வழங்கிட கோரிக்கை வைத்தேன். தென் மாவட்டங்களுக்கு மட்டும் ரூ.2,000 கோடி உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தேன். இயற்கை பேரிடர்களால் ஏற்படும் செலவுகளை சமாளிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாநில பேரிடர் நிவாரண நிதி உள்ளது. எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு என்பதை 5 ஆண்டுக்கு ஒரு முறை நிதி குழு தீர்மானிக்கும்.
இதன்படி, தமிழ்நாட்டிற்கு மாநில பேரிடர் நிவாரண நிதி ஒவ்வொரு ஆண்டுக்கும் 1,200 கோடி ரூபாய் ஆகும். இதில், 75 சதவீதம் மத்திய அரசு தர வேண்டும். மத்திய அரசின் நிவாரண நிதி ஒவ்வொரு ஆண்டும் இரண்டு தவணையாக அளிக்கப்படுகிறது. அதாவது, ஆண்டுக்கு இரண்டு தவணையாக ரூ.450 கோடி அளிக்கப்படும். இயற்கை பேரிடரின் தாக்கம் அதிகமாக இருந்தால், SDRF நிதி போதவில்லை என்றால், இயற்கை பேரிடரை கடுமையான பேரிடராக அறிவித்து NDRF கூடுதல் நிதி ஒதுக்கப்படும்” என்றார்.
”ஆளுநருக்கு நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன்"
தொடர்ந்து பேசிய அவர், "சென்னை வெள்ளம், தென்மாவட்ட வெள்ளத்தையும் கடும் பேரிடராக அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்பதை கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த இரண்டு பேரிடரையும் கடும் பேரிடராக அறிவிக்கப்படவில்லை. கூடுதல் நிதியும் ஒதுக்கப்படவில்லை. மத்திய அரசு விடுவித்த ரூ.450 கோடி தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய இரண்டாவது தவணை தொகைதானே தவிர வெள்ள நிவாரண நிதி அல்ல. அடிக்கடி டெல்லி செல்லும் ஆளுநர், ஒன்றிய அரசிடம் இருந்து தேவையான நிதியை தமிழ்நாட்டிற்கு பெற்று தர வேண்டும். அப்படி வாங்கி கொடுத்தால் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மேலும், ”1801ஆம் ஆண்டுக்கு பிறகு, தென்மாவட்டங்களில் தற்போது தான் அதிக மழை பெய்துள்ளது. தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கால் ஸ்ரீவைகுண்டம், ஏரல், தூத்துக்குடி மிகுந்த பாதிப்படைந்தது. சென்னை மக்களை போல் தென் மாவட்ட மக்களையும் அரசு காக்கும் என உறுதி தருகிறேன். வானிலை மையத்தின் எச்சரிக்கை தாமதாக கிடைத்துள்ளது. வானிலை மையம் அறிவித்ததை விட பல மடங்கு அதிக மழை தென்மாவட்டங்களில் பெய்துள்ளது” என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மேலும் படிக்க
Flood Relief Fund: மழையால் ஸ்தம்பித்த தென்மாவட்ட மக்களுக்கு நிவாரணம்! யார்? யாருக்கு எவ்வளவு?