துபாயிலிருந்து ரூ. 90 லட்சம் மதிப்புடைய 1.5 கிலோ தங்கப் பசையை, சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்து, சென்னை விமான நிலைய கழிவறைக்குள், மறைத்து வைத்துவிட்டு, தலைமறைவான கடத்தல் பயணியை, சுங்க அதிகாரிகள் தேடி வருகின்றனர். விமான நிலைய கழிவறைக்குள், மறைத்து வைத்திருந்த தங்க பசை பார்சலை, எடுத்துக்கொண்டு, சுங்கச் சோதனை இல்லாமல், வெளியில் கொண்டு செல்ல முயன்ற, சென்னை விமான நிலைய ஒப்பந்த ஊழியரை,  கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சென்னை சர்வதேச விமான நிலையம் ( chennai international airport )

 

சென்னை ( Chennai News ): சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் டிரான்சிட் பயணிகள், மீண்டும் மற்றொரு புறப்பாடு விமானத்தில் ஏறுவதற்காக, மேல் தளம் செல்வதற்கான வழியில், டிரான்சிட் பயணிகள் வசதிக்காக கழிவறை  உள்ளது. அந்த கழிவறைக்குள் இன்று காலையில், சென்னை விமான நிலைய ஒப்பந்த ஊழியர் மேப்லீன் (32) என்பவர் சென்று விட்டு, நீண்ட நேரம் கழித்து வெளியில் வந்தார்.

 

உள்நாட்டு முனையம் டெர்மினல் 1 

 

சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், இதை ரகசியமாக கண்காணித்தனர். அதோடு ஒப்பந்த ஊழியர் மேப்லீனை பின் தொடர்ந்தனர். மேப்லீன், சர்வதேச முனையத்தில் இருந்து வெளியில் வந்து, உள்நாட்டு முனையம் டெர்மினல் 1க்கு சென்றார். சுங்க அதிகாரிகள் அங்கு வைத்து, அவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

 

ஒப்பந்த ஊழியர்

 

இதை அடுத்து ஒப்பந்த ஊழியர் மேப்லீனை, சுங்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, முழுமையாக பரிசோதித்தனர். அப்போது அவருடைய உள்ளாடைக்குள், இருந்த பார்சலை வெளியில் எடுத்துப் பார்த்தனர். அதனுள் தங்கப் பசை இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த பார்சலில் இருந்த 1.5 கிலோ தங்கப் பசையை, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ. 90 லட்சம். இதையடுத்து ஒப்பந்த ஊழியர் மேப்லீனை, சுங்க அதிகாரிகள் கைது செய்து, அவரிடம் மேலும் விசாரணை நடத்தினர்.

 

தங்கப் பசை

 

அப்போது துபாயில் இருந்து வந்த பயணி ஒருவர், இந்த தங்கப் பசையை கடத்திக் கொண்டு வந்து, டிரான்சிட் பயணிகளுக்கான கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு, அந்தப் பயணி சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து விட்டார். இந்த ஒப்பந்த ஊழியர், அந்தத் தங்கப் பசை பார்சலை எடுத்துக் கொண்டு வந்து, உள்நாட்டு முனையத்தில் நிற்கும், கடத்தல் பயணியிடம் கொடுக்கக் கொண்டு வந்தார் என்று தெரிய வந்தது. ஆனால் ஒப்பந்த ஊழியர் மேப்லீன், சுங்கத்துறை இடம் சிக்கிக்கொண்டார் என்பது தெரிந்ததும், கடத்தல் பயணி, தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார் என்பதும் தெரிய வந்தது.

 

சிசிடிவி காட்சிகள்

 

இதை அடுத்து சுங்க அதிகாரிகள், சென்னை உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் உள்ள, சிசிடிவி காட்சிகள் மூலம், துபாயிலிருந்து தங்க பசையை கடத்தி வந்து, விமான நிலைய கழிவறைக்குள் மறைத்து வைத்துவிட்டு, தலைமறைவான, கடத்தல் பயணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.