CM Stalin: நீலகிரியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 


சிறுத்தை தாக்கி 2 பேர் உயிரிழப்பு:


நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு புலிகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டு மாடுகள், காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வனப்பகுதியில் வசிக்கின்றன. அவ்வப்போது இந்த விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளின் அருகே சுற்றித் திரிவது வாடிக்கையாக இருந்து வருகிறது.


அவ்வப்போது வனவிலங்குகள் தாக்குவதால் பொதுமக்கள் காயமடைந்து வருகின்றனர். இந்த நிலையில், பந்தலூர் அருகே ஏலமன்னா மற்றும் மேங்கோ ரேஞ்ச் பகுதியில் சிறுத்தை தாக்கி ஒரு பெண் மற்றும் சிறுமி என இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிறுத்தை தாக்கி நான்கு  பேர் காயம் அடைந்துள்ளனர்.


அங்கன்வாடியில் இருந்து தனது தாயுடன் சிறுமி வீடு திரும்பி கொண்டிருக்கும்போது இந்த சம்பவம் நடத்திருக்கிறது.  இதனால், சிறுத்தை நடமாடத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  அப்பகுதி மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது இரண்டு பேரை கொன்ற சிறுத்தையையும் உடனடியாக பிடிக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். இதனை அடுத்து, குழந்தையை தாக்கிக் கொன்ற சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 


நிவாரணம் அறிவிப்பு:


இந்த நிலையில், சிறுத்தை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "நீலகிரி மாவட்டம், ஏலமன்னா கிராமம், மேங்கோ ரேன்ஜ் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த சரிதா (வயது 29) க/பெ. பிரசாந்த் என்பவர் கடந்த 29.12.2023-ம் தேதி அன்றும், மேங்கோ ரேன்ஜ் (அஞ்சல்), எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி நான்சி (வயது 32) த/பெ. சிவ்சங்கர் என்பவர் கடந்த 06.01.2024 அன்றும் சிறுத்தை தாக்கியதன் காரணமாக உயிரிழந்தார்கள் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.


விலை மதிப்பில்லாத இந்த இரு உயிரிழப்புகளை சந்தித்துள்ள குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக தலா 10 இலட்சம் ரூபாய் தமிழக அரசின் சார்பில் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 




மேலும் படிக்க


Global Investor Meet: இத்தனை துறைகளில் தமிழ்நாடு முதலிடமா?!- முதலீட்டாளர்கள் மாநாட்டில் பட்டியலிட்ட அமைச்சர் டிஆர்பி ராஜா!


CM Stalin Global Investor Meet: ”முதலீடு மழையாக பெய்யும் என நம்புகிறேன்” - முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை