கலைஞர் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தொகுத்த 'கலைஞர் 100 கவிதைகள் 100' என்ற நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 


இதுகுறித்து வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 
“கலைஞர் நூற்றாண்டு 
நிறைவை முன்னிட்டு
நான் தொகுத்த
'கலைஞர் 100 கவிதைகள் 100'
என்ற நூலை
மாண்புமிகு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்
தமது முகாம் அலுவலகத்தில்
வெளியிட்டார்


திராவிடர் கழகத் தலைவர்
கி.வீரமணி முதல்நூல்
பெற்றுக்கொண்டார்


அமைச்சர்கள்
துரைமுருகன், பொன்முடி
கே.என்.நேரு, எ.வ.வேலு
மற்றும் வீ.அன்புராஜ்
உடனிருந்தனர்


கல்லாலும் சொல்லாலும்
எழுப்பப்படுவன மட்டுமே
நினைவுச் சின்னங்களாய்
நிலைபெறுகின்றன


இந்த 100 கவிதைகளும்
கலைஞருக்குக் கவிஞர்கள்
சொல்லால் எழுப்பிய
நினைவுச் சின்னம்


இந்திய 
அரசியல் பெருவெளியில் 
ஓர் இனக்குழுத் தலைவனுக்கோ
இந்திய தேசியத் தலைவனுக்கோ 
தான் வாழ்ந்த காலத்தின்
100 கவிஞர்களால் 
பாடப்பட்ட பெருமை
கலைஞருக்கன்றி
வேறெவருக்குமில்லை


அப்படி
வகுத்த பெருமை கலைஞருக்கு;
தொகுத்த பெருமை எமக்கு” எனத் தெரிவித்துள்ளார். 


திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் கலைஞர் நூற்றாண்டு விழா தொடங்கி கொண்டாடப்பட்டு வந்தது. இந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஓராண்டு நிறைவு பெற்று விட்டதால் இப்போது கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுகவினர் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். 


 






அந்த வகையில் திமுக மீதும் கலைஞர் கருணாநிதி மீது மிகவும் பற்று கொண்ட கவிஞர் வைரமுத்து 100 கவிஞர்கள் கலைஞருக்காக பாடிய பாடலை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். இந்த நூலை கருணாநிதியின் மகனும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட திராவிட கழகத்தின் தலைவர் வீரமணி பெற்றுக்கொண்டார்.