தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில், டெல்லி மற்றும் பஞ்சாப் மாநில முதலமைச்சர்கள் சந்தித்தனர். அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் பேசியதாவது, ”2024-இல் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டுமல்ல, ஜனநாயகத்தை காக்கவும் இந்த கூட்டணி தொடர வேண்டும். டெல்லியில் கெஜிர்வால் அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த பாஜக அரசு முயற்சிக்கிறது. குறிப்பாக டெல்லி துணைநிலை ஆளுநர் மூலம் ஆளும் அரசுக்கு தொடர்ந்து தொல்லைகள் தரப்பட்டு வருகின்றன. டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை திமுக எதிர்க்கும்” என பேசினார்.






அவரைத் தொடர்ந்து பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிர்வால் பேசியதாவது, மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு தான் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தொடர்ந்து நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் இரு தரப்புக்கும் இடையேயான பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது அனைவருக்கும் தெரியும். இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் நியமிக்கவும் மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது எனவும் அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் உட்பட்டவர் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், பாஜக அரசு தனது அதிகாரத்தினை பயன்படுத்தி ஆளுநருக்கே முழு அதிகாரமும் உள்ளது என அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. மக்களவையில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தினை மாநிலங்களவையில் நிறைவேற்ற பாஜகவிடம் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இல்லை. எனவே எதிர்க்கட்சிகள் அனைவரின் ஆதரவின் மூலம் இந்த அவசர சட்டத்தினை தவிடுபொடியாக்க முடியும் என பேசினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நான் காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் ராகுல் காந்தியை விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.