ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு குடியரசு தலைவர் வழங்கிய இரவு விருந்தின் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தார்.
இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள காவேரி மேசையில் குடியரசு தலைவரால் வழங்கப்பட்ட ஜி20 விருந்தில் பங்கேற்றேன் என குறிப்பிட்டுள்ளார். அதோடு புகைப்படத்தையும் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணைகுடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதோடு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் கைகுலுக்கும் காட்சியும் அந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
சர்ச்சைக்கு மத்தியில் விருந்து..
உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகள் இடம்பெற்றுள்ளன, ஜி20 கூட்டமைப்பிற்கு நடப்பாண்டு இந்தியா தலைமையேற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இரண்டு நாட்கள் நடைபெறும் ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து, குடியரசு தலைவர் மாளிகையில் உலக தலைவர்களுக்கு நேற்று இரவு விருந்து வழங்கப்பட்டது. அதில் பங்கேற்க மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் தலைவராக உள்ள மல்லிகர்ஜுன கார்கேவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அரசியல் தலைவர்கள் யாரையுமே இந்த விருந்திற்கு அழைக்கவில்லை என மத்திய அரசு விளக்கமளித்தது. இருப்பினும், பாஜக செய்வது கீழ்தரமான அரசியல் என காங்கிரஸ் சாடியது.
இரவு விருந்து:
இந்த சூழலில் நடைபெற்ற விருந்தில் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்கள் கலந்துகொண்டனர். மத்திய அமைச்சர்கள், பாஜகவை சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதலமைச்சர்களும் பங்கேற்றனர். அதேநேரம் சில காங்கிரஸ் முதலமைச்சர்களும், ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் ஒடிஷா முதலமைச்சர்களும் விருந்தை புறக்கணித்துள்ளனர். குறிப்பாக உத்தரபிரதேசத்தில் முதலமைச்சராக உள்ள பாஜகவை சேர்ந்த யோகி ஆதித்யநாத்தும் இந்த விருந்தில் பங்கேற்கவ்ல்லை. இதில் இந்திய சுவைகளுடன் கூடிய உணவுகள் மற்றும் தினையிலிருந்து செய்யப்பட்ட புதுமையான உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த விருந்து முழுமையாக சைவமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.