கரூரில் 50,000 விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்றும், கரூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் 20 ஆயிரம் விவசாய பெருமக்கள் முதல் கட்டமாக கலந்து கொண்டு பயன்பெற உள்ளதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகையை முன்னிட்டு விழா நடைபெறும் தடாகோவில் இடத்தில் பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவர்த்தனம் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரியுடன் நேரில் பார்வையிட்டார். 




 


 செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி:


திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி கடந்த 20 ஆண்டுகளாக இலவச மின்சாரம் கேட்டு விண்ணப்பித்திருந்த விவசாயிகளுக்கு, முதல் கட்டமாக ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறு மாதத்திற்குள் ஒரு லட்சம் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. தற்போது இரண்டாவது கட்டமாக கரூர் மாவட்டத்தில் வருகின்ற 11ம் தேதி மின்சாரத் துறை சார்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சார வழங்கும் திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். கரூரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 20000 விவசாயிகள் கலந்து கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரங்களால் பயன் பெற உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க விவசாய பெருமக்கள் மட்டும் கலந்து கொள்கின்றனர்.




 


அடுத்த கட்டமாக மீதமுள்ள விவசாய பெருமக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் எப்போது வழங்கப்படும் என்று விழா மேடையில் தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். கரூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய விவசாய பெருமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.




இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவர்த்தனம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மெஞ்சுனூர் இளங்கோ உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகளும் அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.