இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 21 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


21 மீனவர்கள் கைது:


கடந்த ஒரு வார காலமாக புயல் அச்சத்தால் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், மீன்பிடிக்க செல்லாமல் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் படகுகளை கரைகளில் நங்கூரமிட்டு நிறுத்தி இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்று மீண்டும் 7 நாட்களுக்கு பிறகு கடலுக்குச் சென்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் மன்னார் கடற்பரப்புக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாக கூறி ஒரு விசைப்படகை சிறைப்பிடித்து அதிலிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த எட்டு மீனவர்களை கைது செய்தனர்.


இதே போல, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைபட்டினம் துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடூந்தீவு கடற்பரப்பில் வைத்து மேலும் 3 விசைப்படகுகளையும் அதிலிருந்த 14 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படை மீனவர்களை  காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.


முதலமைச்சர் ஸ்டாலின் அவசர கடிதம்:


இந்ந நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 21 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ”IND-TN-10-MM- 1061 IND-TN-08-MM-231, IND-TN-08-MM-385, IND-TN-06-MM-707 ஆகிய பதிவு எண் கொண்ட மீன்பிடிப் படகுகளில் இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 21 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினரால் 6-12-2023 அன்று கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கவலைபடத் தெரிவித்துள்ளார்.


மீன்பிடித் தொழிலையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி இதுபோன்று கைது செய்யப்படுவது அவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப்புப் படகுகளையும் விடுவிப்பதோடு, இலங்கைக் கடற்படையினரால் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது வசமுள்ள 133 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 




மேலும் படிக்க


Premalatha Vijayakanth: கேப்டன் மீது என்ன வன்மம்... வதந்தி பரப்பாதீங்க.. கண்கலங்கிய பிரேமலதா விஜயகாந்த்!


Cyclone Michaung: புரட்டியெடுத்த மிக்ஜாம் புயல்! ”நாளைக்குள் 100 சதவீத மின் விநியோகம்" - தலைமைச் செயலாளர் உத்தரவாதம்!