தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்களே முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிப்பதாகவும், முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்க அவர்களுக்கு தகுதியில்லை என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி 169-வது வார்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 28 லட்சம் மதிப்பீட்டில் அண்ணா சாலை பூங்கா பணிகளை துவக்கி வைக்கும் விதமாக அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்ததாவது:
”சிதம்பரம் குழந்தை திருமணம் விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியாகி உள்ளது குறித்த கேள்விக்கு, இது ஒரு குழந்தையின் எதிர்காலம் சார்ந்த விஷயம் தொடர்ந்து அது குறித்து பேசினால் நன்றாக இருக்காது. ஆளுநரும் தெரியாமல் பேசி வருகிறார். முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்களின் அறிக்கை குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து அக்கறை இல்லாதவர்கள், யோசிக்க தெரியாதவர்கள் கூறுகின்ற விமர்சனமாக தான் உள்ளது. இதுவே ஆளுநருக்கு பொருந்தும் என்றார்”.
முன்னதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் பயணத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாவதாகவும், திமுக ஆட்சியின் பாராமுகத்தால், பல்வேறு தொழில் நிறுவனங்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று விட்டதாகவும் அவர் விமர்சித்திருந்தார்.
இதனால், ஏராளமான இளைஞர்களின் வேலைவாய்ப்பு தாரை வார்க்கப்பட்டதாகவும், வெளிநாட்டிற்கு சென்று முதலீடுகளை ஈர்ப்பதற்குப் பதிலாக, ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களை செயல்படுத்துமாறும் அறிக்கையில் அவர் தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டில் தொழில் செய்து வரும் நிறுவனங்கள், மற்ற மாநிலங்களுக்கு செல்லாத வகையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்.. கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு!