கமல்ஹாசன் பிறந்தநாள்:
நடிகர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அரசியல் கட்சியின் தலைவர் என்று பன்முகத்தன்மை கொண்டவர் கமல்ஹாசன். திரைக்கதை , நடிப்பு மட்டுமில்லாமல் நடனம் , பாடகர், ஒப்பனை, என சினிமா தொடர்பான பல பிரிவுகளிலும் வைத்து பாராட்டும் வகையிலான வேலைகள் செய்திருக்கிறார் கமல்ஹாசன். 5 வயதில் இருந்து திரையில் நடிக்க தொடங்கிய கமல்ஹாசன் இதுவரை தனது நடிப்பை நிறுத்தவில்லை. நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, பாடல் என அனைத்திலும் ஸ்கோர் செய்து ரசிகர்களின் மனதில் ஆண்டவராக இடம்பெற்றார் கமல்ஹாசன். இப்படி பன்முகத்தன்மை கொண்ட கமல்ஹாசனின் 68வது பிறந்த நாள் இன்று (நவம்பர் 7) கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
‘
கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில், "கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நலம் சூழ வாழிய பல்லாண்டு” என்று குறிப்பிட்டிருந்தார்.
உதயநிதி ஸ்டாலின்:
”திரையுலக கனவுகளோடு வருபவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாத் தரப்பினரையும் ரசிக்க செய்யும் உலக நாயகன் கமல்ஹாசன் சார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால், கலைஞானி என்று போற்றப்பட்ட கமல் சார், இந்திய திரையுலகின் முக்கிய அடையாளம் என்பது நமக்கெல்லாம் பெருமை. கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி, அரசியல் - சமூகநீதி தளங்களிலும் அவரது பங்களிப்பு போற்றுதலுக்குரியவை” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வைரமுத்து:
"நாம் வாழும் காலத்தின் கர்வ காரணங்களுள் ஒன்று கலைஞானி கமல்ஹாசன் இத்துணை நீண்ட திரைவாழ்வு அத்துணை பேர்க்கும் வாய்க்காது வாழ்வு கலை இரண்டிலும் பழையன கழித்துப் புதியன புகுத்தும் அந்தண மறவரவர் எல்லாம் பார்த்துவிட்ட கமலுக்கு இனி என்ன வேண்டும்? உடையாத உடல் வேண்டும்; சரியாத மனம் வேண்டும் வாய்த்திருக்க வாழ்த்துகிறேன்" என்று வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அன்புமணி ராமதாஸ்:
”மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், தமிழ்த் திரையுலகின் சாதனைச் சிகரமான கமல்ஹாசன் இன்று அவரது 69-ஆம் பிறந்தநாளை கொண்டாடும் வேளையில், அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் தமிழக மக்களுக்கு அவர் நீண்ட காலம் பணியாற்ற எனது வாழ்த்துகள்” என்று பாமக
தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
பினராயி விஜயன்:
"அன்புள்ள கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். ஒரு சிறந்த கலைஞராகவும், சமூக மற்றும் அரசியல் ஆர்வலராகவும், நீங்கள் மக்களின் இதயங்களில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளீர்கள். உங்களுக்கு இன்னும் பல மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வருடங்கள் அமைய வாழ்த்துகள்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.