EB Dept Warning: மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், விபத்துகளை தவிர்ப்பது எப்படி என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுரை வழங்கியுள்ளது.


மின்சார வாரியம் எச்சரிக்கை:


இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “மழைக்காலத்தில், மின்சார வயர்கள் மற்றும் மின்மாற்றிகளில் அசாதாரணங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே, மின்சார வயர்கள் மற்றும் மின்மாற்றிகளில் ஏதேனும் அசாதாரணம் தென்பட்டால், உடனடியாக மின்சார வாரியத்தைத் தொடர்பு கொள்ளவும் 94987 94987” என குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு பதிவில், “மழைக்காலத்தில் மின் விபத்துகளைத் தடுக்க கவனம்!


1. மின்சார செருகிகள் (பிளக் பாயிண்ட்கள்) அருகில் உள்ள ஜன்னல்களை மூடவும்.


2. மழை நீர் மின்சார செருகிகள் (பிளக் பாய்ண்ட்கள்) வழியாக உள்ளே புகாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்


3. மின்சார சாதனங்களை பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள்” என  தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






”வாகனங்களை நிறுத்துவதில் ஜாக்கிரதையாக இருங்கள்”


மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மழை, மின்னல், காற்று காலங்களில் பொது மக்கள் மின்சார கம்பங்களுக்கு செல்லும் மின்சார பாதை மற்றும் மின்மாற்றிக்கு அருகில் நிற்கவோ, செல்லவோ கூடாது. மின்மாற்றிகளிலோ அல்லது மின்கம்பத்திலோ பழுது ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு தெரியப்படுத்தி சரி செய்துக்கொள்ள வேண்டும்.


அறுந்து இருக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது. அருகில் செல்லக் கூடாது. மற்றவர்களையும் செல்ல விடாமல் பார்த்துக் கொண்டு அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். தரமான ஐ.எஸ்.ஐ. முத்திரையிட்ட மின் சாதன பொருட்களை மட்டுமே வீ்டுகளில் பயன்படுத்த வேண்டும். பழுது ஏற்பட்டால் உடனடியாக மின் துண்டிப்பு ஏற்படும் வகையில் வீடு கட்டுமானங்களில் (இ.எல்.சி.பி.) நிலகசிவு மின்திறப்பான் கருவிகளை பொருத்த வேண்டும்.


மின் கம்பம் மற்றும் ஸ்டே (இழுவை) கம்பிகளில் ஆடு, மாடுகளை கட்டக் கூடாது. வீட்டில் துணி காயப்போடுவதற்காக கட்டும் கயிற்றின் மீது எந்த ஒரு மின் ஒயரையும் சுற்றி எடுத்துச் செல்லக் கூடாது. பஸ், லாரி போன்ற வாகனங்களை மின்மாற்றிக்கு அருகிலோ, மின்பாதைக்கு அருகிலோ, கீழ் பகுதியிலோ நிறுத்தக் கூடாது.  மின் பழுது, மின் குறைபாடுகள் மற்றும் விபத்து குறித்து உடனடியாக அருகில் உள்ள மின் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்என அறிவுறுத்தப்பட்டுள்ளது.