CM Stalin: மாற்று கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு:

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பல்வேறு முன்னாள் நிர்வாகிகள் உட்பட, பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர்  முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். அவர்களை வரவேற்று பேசிய ஸ்டாலின், “ மாற்றுக் கட்சியில் இருந்து திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள். திமுக என்பது நேற்று முளைத்த காளான் அல்ல. 1949ல் உருவான திமுக பவள விழா கண்ட இயக்கம். ஒட்டுமொத்த தமிழகத்திற்காக பணியாற்றவே திமுக, ஏழை எளியோருக்கு பணியாற்றவே திமுக.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட வேண்டும் என்ற நோக்கத்தோடு தோன்றியது திமுக. 1957ல் திமுக போட்டியிட்ட முதல் தேர்தலில் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியின் சார்பில் வெற்றி பெற்றனர். மக்களுக்கு பணியாற்ற, ஏழைகளுக்கு தொண்டாற்றிட வேண்டும் என்ற உணர்வோடு திமுக தொடங்கப்பட்டது. 

ஆளுநரை மாற்ற வேண்டாம் - முதலமைச்சர் ஸ்டாலின்

திராவிட மாடல் என்றாலே சிலருக்கு கோபம் வருகிறது. திராவிடம் என்ற சொல்லுக்கு எதிராக ஆளுநர் ரவி பேசி வருகிறார். ஆனால் மீண்டும் மீண்டும் திராவிட மாடல் என்பதை உரைப்போம். திராவிடத்திற்கு எதிராக பேசுபவர்கள் பேசட்டும். மக்கள் அவர்களை ஆதரிக்க மாட்டார்கள்.  திராவிடத்திற்கு எதிராக பேசுபவர்களை கண்டு திமுகவினர் கவலைப்பட தேவையில்லை.  ஆளுநர் ஆர்.என். ரவியை மாற்ற வேண்டாம் என உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கிறேன். ஆளுநரின் பேச்சுதான் திமுகவை வளர்க்கிறது. அதனால் ஆளுநரை மாற்ற வேண்டாம். அடுத்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்துக்கும் ஆளுநர் வர வேண்டும். உரையை படிக்காமல் புறக்கணிக்க வேண்டும். 

சீமான், விஜயை தாக்கிய ஸ்டாலின்?

ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிபவர்கள் ஆட்சிகு வரவேண்டுமென நினைக்கின்றனர். வேடமிட்டுக் நாடகமாடிக் கொண்டிருப்பவர்களை எல்லாம் அடையாளம் காட்ட விரும்பவில்லை. தற்போது திமுகவில் இணைந்தவர்கள் முன்பு இருந்த கட்சியின் பெயரை கூட நான் குறிப்பிட விரும்பவில்லை.  கட்சி தொடங்கிய உடனே ஆட்சிக்கு வருவோம் என்று சிலர் கூறுகின்றனர். மக்களுக்காக எந்த உழைப்பையும் செலுத்தாமல், நாளைய ஆட்சியாளர்கள் என பேசி வருகின்றனர்.

ஸ்டாலின் பெருமிதம்:

திமுக அரசால் தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்கள்  ஏதாவது ஒரு ஒரு வகையில் பயனடைகின்றனர். ஏழாவது முறையாக தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும். மகளிர் உரிமைத் தொகையில் உள்ள குறைபாடுகள் ஓரிரு மாதங்களில் தீர்த்து வைக்கப்படும் என உதயநிதி கூறியுள்ளார்” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.