காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சிவகங்கை அஜித் குமாரின் தம்பிக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணையை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார். அத்துடன் இலவச வீட்டு மனைப் பட்டாவையும் அமைச்சர் வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தில்,போலீசார் பைப்புகளை வைத்து அஜித்தை சரமாரியாக அடித்த வீடியோ நேற்று வெளியானது. அவரது உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்ததும் பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆளும் திமுக அரசுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
ஆவினில் டெக்னீஷியன் பணி
இந்த நிலையில் திமுக சார்பிலும் தமிழக அரசு சார்பிலும் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் நிவாரண உதவிகளை வழங்கினார். இதுகுறித்து அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’’அஜித்தின் தம்பி ஐடிஐ படித்து இருந்த காரணத்தால், அவருக்கு ஆவினில் டெக்னீஷியன் பணி வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். போகப்போக ஊதியம் அதிகரிக்கும். அத்துடன் அரசு புறம்போக்கு நிலத்தில், வீட்டு மனைப் பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது.
திமுகவின் சார்பில் உதவித்தொகை
திமுகவின் சார்பில் ரூ.5 லட்சம் ரொக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டும் அல்லாமல், திமுக சார்பிலும் அரசு சார்பிலும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும். ’’உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு உறுதியாக செய்யும். நீங்கள் தைரியமாக இருங்கள்’’ என்று முதல்வர் ஸ்டாலின் அஜித் குமாரின் தாயிடம் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவாக நடவடிக்கை
ஞானசேகரன் வழக்கை விசாரித்ததைப் போல, இந்த வழக்கும் உடனடியாக விசாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேற்று அஜித்குமாரின் தாயார் மற்றும் சகோதரனுடன் பேசினார். அப்போது, அவர்களிடம் சாரி சொல்லி ஆறுதல் தெரிவித்தார். ’’திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு’’ என்றும் முதல்வர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.