திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆண்டார்குப்பத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், 5 முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். அவை என்ன என்று பார்க்கலாம்.


முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர்


அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 418.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், முடிவுற்ற திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார். அதோடு, 390.74 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். மேலும், 2 லட்சத்து 2 ஆயிரத்து 531 பயனாளிகளுக்கு 357.43 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.


முதலமைச்சர் வெளியிட்ட 5 முக்கிய அறிவிப்புகள்


அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எண்ணூரில் 18,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனல் மின் நிலைய பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், பெரியபாளையம், திருவேற்காடு, சிறுவாபுரி கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். அதோடு, திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சிக்கு உதவும் வகையில், 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை,



  • வாகன போக்குவரத்து அதிகமாக உள்ள திருமழிசை-ஊத்துக்கோட்டை சாலை ரூ.51 கோடியில் மேம்படுத்தப்படும்.

  • மணவூர்-லட்சுமி விலாசபுரம் சாலையில் கொசஸ்தலையாறு ஆற்றின் குறுக்கே ரூ.23.47 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும்.

  • காக்களூர் ஊராட்சியில் தாமரைக்குளம் மேம்படுத்தும் பணிகள், காக்களூர் ஏரி மேம்படுத்தும் பணிகள் ரூ.2.27 கோடியில் மேற்கொள்ளப்படும்.

  • இந்தியாவின் 2-வது பெரிய உப்புத்தர நில ஏரியான பழவேற்காடு ஏரிப்பகுதியில் சூழலியல் சுற்றுலா வசதி ஏற்படுத்தப்படும்.

  • வைரவன்குப்பம் மீனவ கிராமத்தில் மீனவர்களின் பயன்பாட்டுக்காக வலை பின்னும் கூடம் அமைத்துத் தரப்படும்.


நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட இந்த அறிவிப்புகள், திருவள்ளூர் மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.