CM Stalin : அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


கள ஆய்வு


விழுப்புரம் மாவட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு களப்பணியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆய்வு பணி மேற்கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வருகை தந்தார். விழுப்புரத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, நேற்று ஓலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கோப்புகளை சரி பார்த்து வளர்ச்சி பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 


இதனை அடுத்து, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனையில், விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மற்றும் 3 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் , துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்து ஆய்வு செய்து சட்டம்- ஒழுங்கு பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் அதிகாரிகளுக்கு வழங்கினார்.


அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்


அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, ”அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும். அறிவித்த நிதியை குறிப்பிட்ட காலத்திற்குள் திட்டங்களுக்கு செலவிடுவதுதான் திறம்பட்ட நிர்வாகமாகும். மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும், பாராட்டை பெறும் வகையிலும் அதிகாரிகள் செயல்பட வேண்டும். வேலைவாய்ப்பு திட்டங்கள் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர்கள் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்” என்றார்.


மேலும், அண்ணா மறுமலர்ச்சி திட்டங்களை வேகப்படுத்த வேண்டும். வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை கவனமாக தேர்ந்தெடுத்து பணிக்கு வரக்கூடியவர்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும். மூன்று மாவட்டமும் விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் விவசாயிகள் வளம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் தேவையை பூர்த்தி செய்வதற்காக பல்லாயிரம் கோடி செலவு செய்யபட்டு வருகிறது. இதனால் மக்கள் திட்டங்களை அதிகாரிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.


"அதிகபட்ட நிதியை குறிப்பிட்ட காலத்திற்குள் மக்களுக்கான திட்டத்திற்காக  செலவிடுவதுதான் திறம்பட்ட நிர்வாகமாகும். அதை தான் மாவட்ட ஆட்சியரிடம் எதிர்பார்ப்பதாகவும், மக்களோடு பழகி அரசின் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்” எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.




மேலும் படிக்க


TN Corona Spike: கொரோனா பாதிப்பு எப்படி இருக்கு? அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடுத்த நம்பிக்கை!


May Month Bank Holidays: அடுத்த மாசம் பேங்க் போற ப்ளான் இருக்கா ? அப்போ இந்த விடுமுறை பட்டியலை பாத்துட்டு போங்க..