கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நகராட்சி ஆணையராக பணி ஆணை பெற்ற துர்கா என்பவர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பேசிய அவர், “இன்றிலிருந்து நகராட்சி ஆணையராக பணியில் சேர்கிறேன். முதல்வர் கையில் பணி ஆணை வாக்குவது சந்தோஷமாக இருக்கிறது. தமிழக அரசு கொடுத்துள்ள சலுகைகளை வைத்து படித்தாலே நாம் நல்ல இடத்திற்கு செல்ல முடியும். நான் அந்தமாதிரிதான் அரசு பள்ளியில்தான் படித்தேன். அரசுக்கல்லூரியில்தான் படித்தேன். டிஎன்பிஎஸ்சிக்கு கூட அரசு இலவச மையத்தில் தான் பயின்றேன். எனது அப்பா தூய்மை பணியாளரகத்தான் வேலை பார்த்தார்கள். அவர் படும் ஒவ்வொரு கஷ்டத்தையும் பார்த்திருக்கிறேன். அப்பா நல்ல சட்டை போட்டது கிடையாது. நல்ல வேஷ்டி போட்டது கிடையாது. நல்ல செருப்பு போட்டது கிடையாது. நான் பட்ட கஷ்டத்தை என் பொண்ணு படக்கூடாது ரொம்ப வைராக்கியமா இருந்தாரு. அதுக்காக நிறைய இழந்தாரு. நல்ல சாப்பாடு கூட அவர் சாப்பிட்டது கிடையாது. அவர் இருக்கும்போதே எனக்கு கிடைத்திருந்தால் இன்னும் சந்தோஷமா இருந்திருக்கும். 7 மாதத்துக்கு முன் தவறிவிட்டார். இன்றிலிருந்து என் தலைமுறை மாற்றத்தை காணும். இந்த வாய்ப்பு கொடுத்த தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் ஷேர் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கும் திருமிகு துர்கா அவர்களின் பேட்டியைக் கேட்டு அகமகிழ்ந்தேன்!
கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்குத் திருமிகு துர்கா அவர்களே எடுத்துக்காட்டு!
நான் மீண்டும் சொல்கிறேன்…
கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து!” எனத் தெரிவித்துள்ளார்.