இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக விளங்குவது ரம்ஜான். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக, இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பிருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள். தமிழகம் முழுவதும் 14-ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று ஏற்கனவே தலைமை காஜி அறிவித்திருந்தார். இதன்படி, தமிழகத்தில் நாளை ரம்ஜான் பாண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.




 


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு ரம்ஜான் பண்டிகை வாழ்த்துகளை கூறியுள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “தியாகமும், ஈகையும் இணைந்த மார்க்க நெறியினைப் பின்பற்றி வரும் இஸ்லாமியர்களுக்கு எனது இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள். தமிழக மக்களுக்கே உரிய பெருமைக்குரிய பண்பாடான அனைத்து மத சகோதரத்துவம் என்றென்றும் நீடித்து நிலைத்திருக்கும் வகையில், பெருநாள் அமையட்டும். அரசு வெளியிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து பெருநாளை கொண்டாட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சிறுபான்மை சமுதாய மக்களுக்கும், திமுகவுக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது. கருணாநிதியும், நானும் என்றும் இஸ்லாமிய சமுதாய மக்களின் மேல் பேரன்பு கொண்டவர்கள். தி.மு.க. அரசு இஸ்லாமியர்களுக்கு எந்நாளும் பாதுகாப்பு அரணாக விளங்கும் என்பதை இந்த இனிய நன்னாளில் மீண்டும் உறுதிப்படுத்த விழைகிறேன். பேரிடரில் இருந்து அனைவரும் மீள்கின்ற நன்னாளுக்கு பெருநாள் துணையாகட்டும்” என்று தெரிவித்துள்ளார்


ரம்ஜான் பண்டிகை என்றாலே இஸ்லாமியர்கள் மசூதிகளில், ஒன்றாக கூடி சிறப்புத் தொழுகை நடத்துவது வழக்கம். ஆனால், கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக, ரம்ஜான் சிறப்புத் தொழுகைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. நடப்பாண்டிலும் தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தற்போது தமிழகத்தில் மே 24-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் வழிபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 


இந்த சூழ்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மசூதிகளில் கூட்டமாக சிறப்புத் தொழுகை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதத்தினருக்கும் வழிபாட்டு முறைக்கு என சிறப்பு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை பெரும்பாலான இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலே தொழுகையில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.