முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை பற்றி முந்தைய தலைமுறையினர் முதல் இன்றைய தலைமுறையினர் வரை சொல்லி தெரிய வேண்டியதில்லை. பாரம்பரியம் கொண்ட அரசியல் குடும்பத்தில் பிறந்த அவர் இளமை காலம் தொட்டே அரசியலிலும், மக்களுக்கான போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவரது அப்பாவும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பேர் சொல்லும் பிள்ளையாக தனது செயல்பாடுகளில் திகழும் மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளர், சென்னை மேயர், துணை முதலமைச்சர் படிப்படியாக தனது உழைப்பால் உயர்ந்து இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று மக்களின் ஆதரவை பெற்றுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் முதல்முறையாக பதவியேற்றார். இதனிடையே அவர் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை சிறப்பாக கொண்டாட திமுக தொண்டர்கள் முடிவு செய்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தனது பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாட வேண்டாம் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடத்தி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தும் அவர், காலை 8.30 மணியளவில் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடம் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் நேராக அண்ணா அறிவாலயம் செல்லும் அவர், அங்குள்ள கலைஞர் அரங்கில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார். அதுமட்டுமல்லாமல் நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.
இதற்கிடையில் தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது. தொண்டர்கள் கேக் வெட்டியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர். மேலும் அன்னதானம், இரத்ததானம், மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு மக்களுக்கான அடிப்படை உதவிகளும் வழங்கப்பட உள்ளது. மேலும் போஸ்டர்கள், பேனர்கள் என அனைத்தும் மூலமாகவும் பிறந்தநாள் வாழ்த்துகளை தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் #HBDCMMKStalin #HBDMKStalin என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு ஏபிபி நாடு சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!