முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்காரு அடிகளாரின் இல்லத்திற்குச் சென்று அவரை நேரில் நலம் விசாரித்தார். 


தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்ற அரசு விழாவிற்குச் சென்றபோது, அங்குள்ள ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் இல்லத்திற்குச் சென்று அவரை நேரில் நலம் விசாரித்தார். அப்போது, ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி பங்காரு அடிகளார், அவரது மகன் கோ.ப.அன்பழகன் மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர். முதலமைச்சருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி ஆகியோரும் உடன் இருந்தார்கள்.





சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, “நம்மை காக்கும் 48 -ல் அனைவருக்கும் முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான இலவச மருத்துவ உதவியை அரசே மேற்கொள்ளும் வகையில் "இன்னுயிர் காப்போம்" எனும் திட்டத்தை அரசு அறிவித்திருந்தது.


இத்திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேல்மருவத்தூரில் இன்று தொடங்கி வைத்தார். 


தமிழகத்தில் அதிக அளவு சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும், சாலைகளின் வடிவமைப்பு குறித்தும், காவல்துறை உள்ளிட்ட பொதுமக்களுக்கு முதலுதவி பயிற்சி அளிப்பது, சாலை விபத்துகள் குறித்து சிறப்பு சட்டங்கள் இயற்றுவது, புதிய தொழில்நுட்பங்கள் செயல்படுத்துவது குறித்து கடந்த நவம்பர் 18-ம் தேதி பலதுறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.


அந்த கூட்டத்தின் கருத்துத் திரட்டலின் அடிப்படையில் வரைவுத் திட்டம் உருவாக்கப்பட்டது. 


அதன்படி, சாலை பராமரிப்பில் ஏற்படும் குறைபாடுகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக தீர்வு காணவும், புதிய தொழில் நுட்பத்தோடு அதனை சரிசெய்து, தொலைநோக்கு திட்டத்துடன்  விபத்துகளை தவிர்ப்பதுமே இதன் முதன்மையான இலக்காக குறிப்பிடப்பட்டது.


மேலும், சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணிநேரத்திற்கான அவசர மருத்துவ கவனிப்பை அரசே மேற்கொள்ளும் வகையில், “நம்மை காக்கும் 48 - அனைவருக்கும் முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான இலவச மருத்துவ உதவித் திட்டம்” செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.




மேலும், அதற்காக சாலையோரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் இதற்கென கண்டறியப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதற்காக முதல் கட்டமாக ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வரம்புக்குள் 81 தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ முறைகள் செயல்படுத்தப்பட உள்ளன.


12 மாத காலத்திற்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, அதன்பிறகு வருடாந்திர செலவினம் மதிப்பாய்வு செய்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பு மக்கள் இயக்கமாக மாற பள்ளி, கல்லூரி மாணவர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி மற்றும் தன்னார்வ அமைப்புகள், விபத்தில் முதலுதவி செய்யும் பொதுமக்கள் அனைவருக்கும் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு உருவாக்கும் வகையில் "இன்னுயிர் காப்போம்-உதவி செய்" திட்டம் செயல்படும்.


சீரான சாலைகளும், நம்மைக் காக்கும் 48 மணிநேரமும், அவசர மருத்துவ சேவைகளுக்கான சட்டமும், உதவியையும் மேற்கொள்ளும் தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தினை செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.