தமிழ்நாட்டில் கொரோனா பரவில் மிகவும் அதிகமாகி வருகிறது. இதனால் பல பகுதிகளில் படுக்கை வசதியில்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். அதேபோல பலர் சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காமல் அரசு வழங்கும் மையத்தில் கூட்டமாக நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உருவானது. இதனால் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட்டு வந்த ரெம்டெசிவிர் மருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். 


இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு ஒருநாளைக்கு 7000 ரெம்டெசிவிர் எண்ணிக்கை 20 ஆயிரமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், "தமிழ்நாட்டிற்கு வழங்கி வந்த ரெம்டெசிவிர் மருந்துகளின் அளவை உயர்த்தியதற்காக நன்றி. மேலும்  கொடிய பெருந்தொற்றினை எதிர்கொண்டிருக்கும் சூழலில் குறித்த நேரத்தில் உயிர் காக்கும் மருந்து, ஆக்சிஜன் மற்றும் உபகரணங்களின் தேவை இன்றியமையாதது" எனத் தெரிவித்துள்ளார். 




முன்னதாக அரசு ரெம்டெசிவிர் வழங்கும் மையங்களில் மக்கள் கூட்டமாக கூடி வந்தனர். இதனை தடுக்கும் வகையில் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு ரெம்டெசிவிர் அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதன்மூலம் தேவையில்லாமல் கூட்டம் கூடுவதை தவிர்க்க முடியும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது. அத்துடன் தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட புதிய கொரோனா சிகிச்சை நெறிமுறைகளில் ரெம்டெசிவிர் பயன்பாடு குறித்து எதுவும் இடம்பெறவில்லை. ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்து இல்லை என்று பல மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.