இரண்டு ஆண்டுகால திமுக ஆட்சி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை புறவெளியில் உள்ள பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் குறித்து ஆளுநர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தும் ஆளுநர் அபாண்டமாக பொய் பேசியுள்ளார் எனக் கூறினார்.


கொந்தளித்த முதலமைச்சர்:


அந்த நிகழ்வில் மேலும் பேசிய அவர், “ ஆரியத்தை வீழ்த்தும் ஆயுதம் தான் திராவிடம். அதனால் தான் ஆளுநர் திராவிடத்தைப் பார்த்து பயப்படுகிறார். பயப்படாதீங்க ஆளுநரே, திரவிட மாடல் என்பதை எதையும் இடிக்காது, மாறாக உருவாக்கும். திராவிட மாடல் என்பது எதையும் அழிக்காது சீர் செய்யும். திராவிட மாடல் என்பது யாரையும் தாழ்த்தாது அனைவரையும் சமமாக நடத்தும். திராவிட மாடல் என்பது யாரையும் புறக்கணிக்காது. தோளோடு தோள் நின்று அறவணைக்கும்” என்றார். 


அ.தி.மு.க. எதிர்கட்சிகள் பேசுவதைப் பற்றி எனக்கு எந்தவிதமான கவலையும் இல்லை. அவர்கள் அப்படிதான் பேசுவார்கள், அப்படித்தான் பேச வேண்டும். ஆனால் அரசின் ஒரு அங்கமாக இருக்க வேண்டிய ஆளுநர் ஏன் எதிரிக்கட்சி போல் செயல்படவேண்டும்? ஆளுநர் எந்த நோக்கத்திற்காக தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டார்? மாநில அமைதியை குலைக்க வந்துள்ளாரா? தமிழ்நாட்டின் அமைதியான சூழலை சீர்குலைக்கத்தான் அவரை அனுப்பியுள்ளார்களா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது. சில நாட்களுக்கு முன்னர் ஆளுநர் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் ‘ முதலமைச்சர் என்னிடம் அன்பாக உள்ளார். நானும் அன்பாகத்தான் உள்ளேன் என கூறியுள்ளார். அவர் இப்படி என்னை பாராட்டி விட்டார் எனபதற்காக கொள்கைகளை விட்டுத்தர மாட்டேன். சட்டமன்றத்தில் அவை மரபை மீறிய ஆளுநருக்கு எதிராக தனித்தீர்மானம் நிறவேற்றினோம்” என பேசினார். 


மேலும் அவர், ”பாஜக ஆட்சி செய்யக்கூடிய கர்நாடகம் மற்றும் மணிப்பூர் மாதிரி தமிழ்நாட்டில் கலவரம் நிகழ்கிறதா? கள்ளக்குறிச்சி பள்ளிகூட கலவரத்தை ஒரு மணி நேரத்தில் கட்டுப்படுத்தினோம். கலவரங்கள் இல்லாமல் தமிழ்நாடு முன்னேற்றப்பாதையில் செல்வதைக் கண்டு சிலருக்கு வயிறு எரிகிறது. ஆன்லைன் தடைச் சட்டத்துக்கு கையெழுத்து போடாமல் தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டவர் தான் ஆளுநர். மேலும் அவர் யாருடைய கைப்பாவையாக செயல்படுகிறார் என்று மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியா முழுவதற்கும் திராவிட மாடலைக் கொண்டு செல்வோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவோம்” எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அந்த கூட்டத்தில் பேசினார். 


மேலும், “ திராவிடம் காலாவதியாகிவிடவில்லை. சனாதனத்தை காலாவதியாக்கியது தான் திராவிடம். வர்ணாசிரமத்தை, மனுநீதியை காலாவதியாக்கியது தான் திராவிடம். சாதியின் பெயரால் இழிவாக்கியதை காலாவதியாக்கியது தான் திராவிடம், பெண் என்பதால் புறக்கணிப்பதை காலாவதியாக்கியது தான் திராவிடம்” எனவும் அவர் பேசியுள்ளார்.