Continues below advertisement

திரும்ப திரும்ப இதையே பேசிட்டு இருந்தால் நான் பொள்ளாச்சி கதையை ஆரம்பிக்க வேண்டி இருக்கும் என பேரவையில் இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் சட்டென எழுந்து பதிலடி கொடுத்தார். 

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “நாங்கள் கேள்வி எழுப்பினால் நாள்தோறும் ஒரு அமைச்சர் எனக்கு எதிராக அறிக்கை விடுகிறார்கள்.  உயர்க்கல்வித்துறை அமைச்சர் ஒரு அறிக்கை விட்டார். சட்டத்துறை அமைச்சர் ஒரு அறிக்கை விடுகிறார். சமூகவளத்துறை அமைச்சர் ஒரு அறிக்கை விடுகிறார். போக்குவரத்துறை அமைச்சர் ஒரு அறிக்கை விடுகிறார். கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் திமுக மலிவான அரசியலைச் செய்கிறது. யார் இந்த சார் எனக் கேள்வி கேட்டால் ஏன் பதறுகிறீர்கள்?குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் ஏன் இந்த பதற்றம்? எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்?” என பொங்கினார். 

Continues below advertisement

உடனே சட்டென எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின், “நீங்கள் தினம் தினம் அறிக்கை கொடுத்துட்டு இருப்பீங்க. அதனால்தான் எங்களின் அமைச்சர்கள் பதில் சொல்றாங்க. அதை கண்டு நீங்க பயப்படுறீங்க. தவறான செய்தியை திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கீங்க. அதுக்கு பதில் சொல்ல வேண்டியது எங்களின் கடமை. அதனால் எங்கள் அமைச்சர்கள் சொல்றாங்க. எந்த காரணத்தை கொண்டும் நாங்கள் யாரையும் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கமாட்டோம். 

அது எங்களுக்கு தேவையுமில்லை. குற்றவாளிக்கு உரிய தண்டனையை வாங்கி கொடுப்பதுதான் எங்கள் கடமை. அதில் எந்த மாற்றமும் கிடையாது. திரும்ப திரும்ப இதையே அவர் பேசிக்கொண்டு இருக்கிறார். 

திரும்ப திரும்ப இதையே பேசிக்கொண்டு இருந்தால் நான் பொள்ளாச்சி கதையில் இருந்து ஆரம்பிக்க வேண்டி வரும்” என எச்சரித்தார். 

தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “இந்த வழக்கை நீதிமன்ற உத்தரவுப்படி, சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது. உங்களுக்கு எந்த குறை இருந்தாலும், வேறு ஆதாரங்கள் இருந்தாலும் நீங்கள் ஆணையத்திடம் போய் சொல்லுங்கள். அதைவிட்டுட்டு நீங்களும் நாங்களும் பேசுவது எதற்கு?” எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “பொள்ளாச்சி சம்பவத்தை பொருத்தவரை உடனடியாக எஃப்.ஐ.ஆர் போடப்படவில்லை. ஆனால் அண்ணா பல்கலை கழக விவகாரத்தில் உடனடியாக எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு குற்றவாளி உடனடியாக் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் நீங்கள் ஆட்சியில் இருந்தபோது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு 12 நாட்கள் கழித்துதான் குற்றவாளி கைது செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு இடையில் நடந்தது என்ன?

அந்த நாட்களில் குற்றவாளியை காப்பாற்றும் செயலில் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்பதுதான் எனது குற்றச்சாட்டு. இதை மூடி மறைத்து தவறான தகவலை எதிர்க்கட்சித்தலைவர் பதிவு செய்கிறார். சிபிஐ வந்த பிறகுதான் அவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது வெளியில் தெரிய ஆரம்பித்தது. இதுதான் உண்மை. 

அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையில் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரைக்கூட திமுக காரன், திமுக காரன் என்று சொல்லிட்டே இருக்கீங்க. சொல்லிட்டு போங்க. நான் கவலைபடல. இப்பவும் சொல்றேன். எல்லா நிகழ்ச்சிக்கும் வந்துருக்கான், போட்டோஸ் எடுத்திருக்கிறான். அதேமாதிரி இரண்டு நாட்களுக்கு முன்னாடி அண்ணா நகரில் நடந்தது என்ன?அதிமுகவை சேர்ந்த வட்டச் செயலாளர் தானே? நீங்கள் உடனே கட்சியில் இருந்து நீக்கி இருக்கீங்க. வரவேற்கிறேன். இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர் திமுக உறுப்பினராக இருந்திருந்தால் நாங்களும் நீக்கியிருப்போம். அவர் திமுக உறுப்பினர் கூட இல்லை. அவரை எப்படி நாங்கள் நீக்க முடியும். அதனால்தான் பொறுமையாக இருந்து எல்லா நடவடிக்கையும் எடுத்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.