தமிழர் என்ற அடையாளத்தோடு ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு திருவிழாக்களை ஒற்றுமையோடு நடத்துவோம் என மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன மதுரை அலங்காநல்லூரில் உள்ள கீழக்கரை கிராமத்தில் ரூ.62.78 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மூர்த்தி, எ.வ.வேலு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட பலரும், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வீரர்களும், தீரர்களும் வாழும் மதுரை மண்ணில் ஏறு தழுவுதல் விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். மதுரையை தூங்கா நகரம் என்பார்கள். போட்டி என்று வந்துவிட்டால் தோல்வியை தூள் தூளாக்கும் நகரம் என்பதை வாடிவாசல் ஆண்டுதோறும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. சங்கம் வளர்த்த மதுரையில் மாபெரும் ஏறு தழுவுதல் மைதானம் திமுக அரசால் கட்டப்பட்டுள்ளது. இங்கு அமைந்திருக்கும் இந்த பண்பாட்டு சின்னம் தமிழகத்தின் மரபின் தொடர்ச்சி. சிந்து சமவெளி நாகரிகத்தில் திமில் கொண்ட காளைகளின் முத்திரை இருக்கிறது.
திமுக ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 3 முக்கிய கம்பீர சின்னங்களை ஏற்படுத்தியுள்ளோம். மதுரைக்கு அருகில் கீழடி அருங்காட்சியகம், கலைஞர் நூலகம் ஆகியவை தொடர்ந்து கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தை மாதம் தொடங்கி பொங்கலுக்கான முதல் 3 நாட்கள் அரசு கருவூலம் தொடங்கி மற்ற அனைத்து அலுவலகத்தையும் மூட வேண்டுமென ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் ஆளுநர்கள் அறிவித்தனர். தமிழர்களின் பண்பாட்டை சரியாக அறிந்தவராக அந்த காலத்து ஆளுநர்கள் இருந்தனர். இந்த பண்பாட்டு திருவிழா உலகம் முழுவதும் பேசப்பட வேண்டும் என்றே இந்த அரங்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
கலைஞர் கருணாநிதிக்கு ஏறு தழுவுதல் மீது தனிப்பிரியம் உண்டு. அதனால் தான் தன்னுடைய மூத்த பிள்ளையான முரசொலியின் சின்னமா ஏறுதழுவுதல் காட்சியை வைத்தார். 1974 ஆம் ஆண்டு ஜனவரியில் சென்னையில் ஏறுதழுவுதல் போட்டியை நடத்தியவர் கலைஞர். 2006 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் போட்டிகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்த போது பாதுகாப்பாக போட்டியை நடத்துவோம் என உறுதியளித்து அனுமதி பெற்றார். 2007 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தபோது தடையை நீக்க வலுவான வாதங்கள் வைத்து அனுமதி பெற்றது திமுக அரசு காலத்தில் தான்.
சாதி பிளவுகளும், மத வேறுபாடுகளும் தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்க பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதை உணர்ந்து, தமிழர் என்ற அடையாளத்தோடு இதுபோன்ற பண்பாட்டு திருவிழாக்களை ஒற்றுமையோடு நடத்துவோம் என இந்த தருணத்தில் சொல்லிக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.