வரும் 28 ஆம் தேதி திமுக மற்றும் காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வரும் 28 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அந்த வகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும். ஜனவரி 28 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் சென்னை அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. டி.ஆர் பாலு தலைமையிலான குழுவினர், காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக குழுவுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகள் தேர்தல் களத்தை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக, ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதேபோல், இம்முறை காங்கிரஸ் கட்சி எப்படியாவது ஆட்சி அமைக்க வேண்டும் என தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக திமுக தரப்பில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திமுக துணைப்பொதுச் செயலாளர் எம்.பி கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்ட தேர்தல் அறிக்கை குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்நிலையில் வரும் 28 ஆம் தேதி காங்கிரஸ் மற்றும் திமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. கடந்த முறை ஒதுக்கப்பட்ட தொகுதிகள் இந்த முறையும் ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.