ஜனநாயகத்தை காக்க எந்தவொரு தியாகத்தையும் செய்யக்கூடியவர்கள் திமுகவினர் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக கட்சி தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அறிவு திருவிழா இன்று நடைபெற்றது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “எமர்ஜென்ஸி காலத்தில் திமுக தலைவர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை மிகப்பெரிய அளவில் நெருக்கடியை சந்தித்தனர். அறிவை மையப்படுத்தி அறிவொளியை பரப்புவதை தலையாய கடமையாக திமுக செய்து வருகிறது. திமுகவை தொடங்கியது அண்ணா, அதனை 50 ஆண்டுகளாக கட்டிக் காத்தது கலைஞர் கருணாநிதி. முழுக்க முழுக்க சாமானியர்களால் தொடங்கப்பட்டு 1967ம் ஆண்டு முதல் ஆட்சியைப் பிடித்த மாநில கட்சியை இன்று வரை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஏதோ கட்சியைத் தொடங்கினோம், அடுத்த முதலமைச்சர் நான் தான் என ஆட்சிக்கு வரவில்லை. கழகத்தின் தலைவர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை சுற்றி சுழன்று பணியாற்றினார்கள். உயிரை கொடுத்து 18 ஆண்டுகள் ஒவ்வொருவரும் உழைத்தார்கள். எத்தனை தியாகங்கள், சிறை வாசங்கள், துரோகங்கள் என திமுக சந்தித்தது, உழைத்தது சாதாரணமானது அல்ல.
நாம் பெற்ற வெற்றி என்பது யாராலும் படைக்க முடியாத வரலாற்று சாதனையாகும். இதனைப் பற்றி தெரியாத சிலர் நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள். இன்னும் சில அறிவிலிகள் திமுகவை போல வெற்றி பெறுவோம் என கூறுகிறார்கள்.அப்படி பெற அறிவும், உழைப்பும் தேவை. ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு திமுக தான்.
இப்படி ஒரு இயக்கம் இந்த மண்ணில் இனி தோன்ற முடியாது. இந்த வரலாற்றையும், கொள்கைகளையும் உதயநிதி ஸ்டாலின் இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்த்ததால் தான் இளைஞரணி செயலாளராக அவர் பொறுப்பேற்றதில் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்களை அவர் கட்சிக்குள் கொண்டு வந்திருக்கிறார்.
இப்படிப்பட்ட திமுகவை அழிக்க வேண்டும் என்பவர்களின் எண்ணங்கள் நிறைவேறப் போவதில்லை. இந்தியாவே போற்றும் இயக்கமாக திமுக வளர்ந்துள்ளது. இதுதான் பலரின் கண்களை உறுத்துகிறது. நாம் பேசும் மாநில சுயாட்சி, கூட்டாட்சி, சமூக நீதி, சுய மரியாதை ஆகிய கருத்துகள் இந்தியா முழுவதும் பரவி விட்டது. இவர்களை தமிழ்நாட்டில் முடக்க நினைத்தோமே இவர்கள் இந்தியா வரை பரவுகிறார்களே என சிலர் கோபம் கொள்கின்றனர்.
இந்த அறிவுத்திருவிழா திராவிடம் வெல்லும், அதை காலம் சொல்லும் என்பதை பசைசாற்றும் விழாவாகும். மேலும் இங்கு கூடியிருக்கும் கூட்டம் கூடி கலையும் கூட்டமல்ல.. காலம் முழுக்க கொள்ளைகளை கூடு கட்டும் கூட்டமாகும். அதனால் தான் எத்தனை பெரிய எதிரிகளும், எத்தனை பெரிய தந்திரங்கள் மூலமாகவும் நம்மை வீழ்த்த முடியவில்லை. கொள்கை ரீதியாக திமுகவை வீழ்த்த முடியாததால் தான் தேர்தல் ஆணையம் மூலமாக குறுக்கு வழியில் வீழ்த்த முடியுமா என முயற்சி செய்து பார்க்கிறார்கள். அதுதான் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம். அதனை எதிர்த்து சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாம் போராட போகிறோம். இந்த விவகாரத்தில் களப்பணியாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்