உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கும் கோரிக்கை வலுத்திருக்கிறது; ஆனால் பழுக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். 


சென்னை கொளத்தூர் தொகுதி வீனஸ் நகர் பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பல்வேறு திட்டங்களை ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 


கொளத்தூர் துணை மின் நிலையம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் நிலையத்தை முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். 


பருவமழை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், “
எப்படிபட்ட மழை வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. மழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது” எனத் தெரிவித்தார். 


மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறதே? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்டாலின் “உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை” என தடாலடியாக பதிலளித்தார். 


இதன் மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு இப்போதைக்கு துணை முதலமைச்சர் பதவி கிடையாது என சூசகமாக பதிலளித்துள்ளார். 


முன்னதாக உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டுமென அமைச்சர்கள் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இதுகுறித்து அமைச்சர் உதயநிதியே ஒரு முறை பேசியிருந்தார். அப்போது அவர் பேசுகையில், “ஒவ்வொரு அமைச்சரும் முதலமைச்சருக்கு துணையாகத்தான் இருப்போம். எந்த பதவி வந்தாலும் இளைஞர் நலன் பதவியே எனக்கு மிகவும் நெருக்கமானது. இதையேதான் நம் தளபதியும் ஏற்கெனவே கூறியுள்ளார். அதையே தான் நானும் சொல்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். 


இதையடுத்துதான் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கன்ஃபார் என பேச்சு நிலவியது. இந்த நிலையில் முதலமைச்சர் கூறிய இத்தகைய பதில், இருக்கு ஆனால் இப்போதைக்கு இல்லை என்றே எடுத்து கூறியுள்ளது.