தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம் - கடற்கரைக்கு செல்லத் தடை
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. டிசம்பர் 31 முதல் ஜனவர் 1ஆம் தேதி வரை கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு நாட்களுக்கு கடற்கரைகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுழற்சி முறையின்றி வகுப்புகள் செயல்படும்
ஜனவரி ஆம் தேதி முதல் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையின்றி வழக்கம்போல் செயல்படும் என்றும், கல்லூரிகள், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களும் சுழற்சி முறையின்றி இயல்பாக செயல்படும் என்றும், ஊரடங்கு காரணமாக மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதால் நேரடி வகுப்புகளுக்கு அனுமதி எனவும் அரசு தெரிவித்துள்ளது.
நீச்சல் குளங்களுக்கு அனுமதி
கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் பரவல் - முதல்வர் அறிவுரை
பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், அண்டை மாநிலங்களில் ஒமிக்ரான் பரவி வருவதால் மக்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும், முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்