தமிழ்நாட்டின் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்திl, “தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்து, ஒரு மாதம் கடந்திருக்கிறது. பொறுப்பேற்பதற்கு முன்பே கொரோனா பேரிடர் நிலையை உணர்ந்து, பாரபட்சமற்ற அணுகுமுறையுடன் மக்களின் உயிர் காக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மே 7-ஆம் நாள் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நானும், அமைச்சரவையில் உள்ள அனைவரும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் 24 மணிநேரமும் மக்கள் நலனையே முதன்மையாகக் கொண்டு செயலாற்றியதன் விளைவாக, நோய்த்தொற்றுச் சங்கிலியை உடைக்கும் முயற்சிக்கு ஓரளவு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. கழக அரசு ஒரு திங்கள் காலத்தைக் கடந்திருக்கும் நிலையில், அனைத்துத் தரப்பிலிருந்தும் கழக அரசுக்கு வாழ்த்துகள் வந்தவண்ணம் உள்ளன. ஊடகங்கள் உண்மை நிலையை உரைக்கின்றன. பொதுமக்கள் தங்களின் நம்பிக்கை வீண்போகவில்லை என்ற நிம்மதி அடைந்துள்ளனர்.




ஆட்சியின் மீது அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படும் சிறுசிறு விமர்சனங்களைக்கூட புறக்கணிக்காமலும், மாற்று ஆலோசனைகளைக் கவனத்தில் கொண்டும் மக்களின் நலன் காக்கும் அரசாகச் செயல்பட்டு வருகிறோம். கொரோனா தொற்று அதிகமாக இருந்த கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டேன். பாதிப்புக்குள்ளானோருக்கு உரிய முறையில் விரைவான வகையில் சிகிச்சை கிடைத்திடவும், மற்றவர்கள் பாதிப்படையாத வகையில் தடுப்பூசி முகாம்களைக் கூடுதலாக்கியும், எளியோருக்கான உதவிகள் வழங்கியும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனும் பாதுகாக்கப்பட்டது. கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ம் நாள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டமும், இரண்டாவது கட்ட நிவாரணத் தொகையான ரூ.2000 வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டது.  ஊரடங்கால் ஏழை - எளிய மக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளைப் போக்கும் வகையிலும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவிற்குப் பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன் துணைத் தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்தக்  குழுவில் உள்ள உறுப்பினர்களுடனான ஆலோசனைக்  கூட்டம் நடைபெற்று, அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து, அனைத்து மக்களுக்குமான இந்த அரசு தனது பணிகளை ஓய்வின்றி மேற்கொண்டு வருகிறது.


அந்த வகையில் திருச்சி - தஞ்சை மாவட்டங்களில் காவிரிப் பாசனப் பகுதிகளில் நடைபெறும் தூர்வாரும் பணிகளைப் பார்வையிடவும், சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையினைத் திறந்து டெல்டா உழவர்களின் தாய்ப்பாலாக விளங்கும் காவிரி நீரைக் குறுவை சாகுபடிக்கு வழங்கிடவும் இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்கிறேன்.




நாளை திருச்சி - தஞ்சை மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன்.  காவிரிப் பாசனப் பகுதியில் 4061 கி.மீ. தூரத்திற்குத் தூர்வாரும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படுகின்றன. கடைமடை வரை இந்தப் பணிகள் செம்மையாக நடைபெறுவதை உறுதி செய்து, ஜூன் 12ம் நாள் சேலம் மாவட்டத்தில் ஆய்வுப் பணிகள் - ஆலோசனைக் கூட்டங்கள் - நலத்திட்ட உதவிகளில் பங்கேற்று அதன்பின்  மேட்டூர் அணையிலிருந்து காவிரிப் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட இருக்கிறேன். முறையாகத் தூர்வாரி, ஆறுகள் – கால்வாய்கள் - வாய்க்கால்களில் புதுப்புனல் பெருக்கெடுத்தோட வழி செய்வதன் வாயிலாக டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலத்தில் குறுவை சாகுபடி சிறப்பாக அமையும்.


மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் நான் மேற்கொள்ளவிருப்பவை முழுக்க முழுக்க அரசுப் பணிகள் சார்ந்தவை என்பதால் அந்தந்த மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர் - கிளைக்கழக நிர்வாகிகள் - செயல்வீரர்கள் உள்ளிட்ட அன்புக்குரிய உடன்பிறப்புகள் என்னை நேரில் சந்திப்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டாம். வரவேற்பு அலங்காரங்கள் எதிலும் ஈடுபட வேண்டாம். கொரோனா நோய்த்தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு, மக்களின் உயிர்ப்பாதுகாப்பை உறுதி செய்யும் நாள்தான் மகிழ்ச்சியான நாளாக - வெற்றிகரமான நாளாக அமையும்.


ஊரடங்கு காரணமாக நோய்த்தொற்று எண்ணிக்கை 17ஆயிரம் என்கிற அளவிற்கு இறங்கி வந்துள்ளது. எனினும், முழுமையான அளவில் நோய்த்தொற்று சங்கிலியை உடைக்க வேண்டியுள்ளது. அதிலும், நான் பயணம் மேற்கொள்ளவிருக்கும் மூன்று மாவட்டங்களில் தஞ்சையும் சேலமும் நோய்த்தொற்று எண்ணிக்கை சற்று கூடுதலாக உள்ள மாவட்டங்கள். எனவே, நீங்களும் நானும் ஊரடங்குக் கால நெறிமுறைகளைக் கட்டாயம்  கடைப்பிடிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நோய்த் தொற்று இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிவிட்டு உங்கள் அன்பு முகம் காண நேரில் வருவேன்" என எழுதியுள்ளார்.