16வது தமிழக சட்டப்பேரவைக்கான எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் கட்சியின் கொறடாவை தேர்ந்தெடுக்கும் விதமாக வரும் 14ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து அஇஅதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில்,"அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 14ம் தேதி, திங்கட்கிழமை 12.00 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில், கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்; கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தும், முகக் கவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும், MLA ID Card உடன் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், 14ம் தேதியன்று தலைமைக் கழகத்தில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம். மட்டுமே நடைபெற இருப்பதால்; கொரோனோ பெருந்தொற்றின் காரணமாக அன்னறய தினம் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தலைமைக் கழகத்திற்கு வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, தலைமைக் கழக வளாகத்துக்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்க இயலாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 21-ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கும் என பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார். சென்னை வாலாஜா சாலை ஓமந்தூரார் அரசினர் தொட்டம், கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறுகிறது. பேரவை நிகழ்வுகள் தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
எனவே, அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், எதிர்க்கட்சி துணைத் தலைவராக வைத்திலிங்கம், கொறடாவாக பொள்ளாச்சி ஜெயராமன் அல்லது மனோஜ் பாண்டியன் தேர்வாக வாய்ப்பு உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதற்கு கட்சிக்குள் கடும் எதிப்புகள் கிளம்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தனது ஆதரவாளர்களாக இருக்கும் எஸ்.பி.வேலுமணி அல்லது பொள்ளாச்சி ஜெயராமனை கொறடாவாக நியமித்து, கட்சியை மட்டுமல்ல, பேரவைக்கு உள்ளேயும் எம்.எல்.ஏக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி விரும்புவதாகும் தெரிவிக்கப்படுகிறது.
'ஆபரேஷன் Whip' ஓபிஎஸ்-ன் அடுத்த மூவ்...!
ஏனெனில், எதிர்கட்சித் தலைவர் பதவியை விட அக்கட்சியின் கொறடா பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பேரவையில் தங்கள் கட்சி சார்பாக யார் யார் பேசவேண்டும் என்று முடிவு செய்து, சபாநாயகரிடம் பட்டியல் அளிப்பவர் கொறடாதான். அவர், நினைத்தால், அதிமுகவில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு பேச வாய்ப்பை வழங்காமல், வேறு ஒருவரை கூட பேசச்சொல்ல முடியும் . சட்டப்பேரவைக்கு வருவது பற்றியோ, அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பு, தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புகளில் கொறடா இடும் கட்டளைப்படியே அந்த கட்சி எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வேண்டும். அப்படி மாற்றி வாக்களிக்கும்பட்சத்தில் அவரை எம்.எல்.ஏ பதவியை விட்டே நீக்க பரிந்துரைக்கும் வலிமை கொறடாவுக்கு உண்டு. அதனால்தான், கொறடா பதவியை பெற ஓபிஎஸ் கடினமாக மெனக்கெடுகிறார்.
O. Panneerselvam Update : ’அரசு வீட்டை காலி செய்த ஓபிஎஸ்’ தி.நகர் சென்றார்…!
முன்னதாக, கடந்த 4ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகத்தில் 9 மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இந்த, ஆலோசனை கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொள்ள வில்லை. அரசு பங்களாவை காலி செய்து புதுவீடு புகும் நிகழ்வில் பங்கேற்று இருப்பதால் ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை என காரணம் கூறப்பட்டாலும், அதுமட்டுமே காரணமாக இருக்குமா என்கிற கேள்விகள் எழுந்தன.
எனவே, வருகின்ற எம்ஏஎல்க்கள் ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் கொறடா பதவிக்கு ஓபிஎஸ் ஆதாரவாளர்கள் நியமிக்கபடாமல் போனால், அதிமுக ஒற்றைத் தலைமையை நோக்கி செல்வதற்கான அடித்தளங்கள் வரும் 14ம் தேதி முதல் அமைக்கப்படும் என்று பேசப்படுகிறது.