தமிழ்நாட்டில் மின்னணு உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இதன் மூலம், மத்தியத் திட்டத்தைப் பூர்த்தி செய்யும் இத்தகைய முயற்சியை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்கனவே ஒரு மின்னணு கூறுகள் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதனுடன் இணைந்து, தமிழ்நாடு அரசு இப்போது நிறுவனங்களை மாநிலத்திற்கு ஈர்ப்பதற்குப் பொருத்தமான சலுகைகளை வழங்கும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மாநில அளவிலான முயற்சியின் மூலம், தமிழ்நாடு ரூ. 30,000 கோடி மதிப்புள்ள முதலீடுகளை ஈர்த்து 60,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “மின்னணுவியல் துறையில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழ்நாடு ஏற்கெனவே அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது.
மேலும் மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்தியை ஊக்குவித்திடவும் குறைக்கடத்தி துணைப் பிரிவுகளில் பெருமளவு முதலீடுகளை ஈர்த்திடவும் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணு கொள்கை 2024ஐ அறிமுகப்படுத்தியது.
மின்னணுவியல் உற்பத்தி சூழலமைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில், மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
மத்திய அரசுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மானியத்திற்கு இணையாக, தமிழ்நாடு அரசும் ஊக்கத்தொகை வழங்கிட இந்த திட்டம் வழிவகை செய்யும்.
இந்த மாநில அளவிலான முயற்சியின் மூலம், தமிழ்நாடு ரூ. 30,000 கோடி மதிப்புள்ள முதலீடுகளை ஈர்த்து 60,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.