கிருஷ்ணகிரி கொலை தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கமளித்தார்.  அதில், “ கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரி பட்டினம் காவல்நிலைய சரகம், கிட்டம்பட்டியை சார்ந்த ஜெகன் (வயது 28) மார்ச் 21ம் தேதி சுமார் மதியம் 1.30 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு சிலர் ஆயுதங்களால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக காவேரி பட்டினம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 


இதுகுறித்த விசாரணையில் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியான சரண்யாவை ஜெகன் காதலித்து வந்துள்ளார். மேலும், பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி 26.1.2023 ல் திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது. 


இதனால் ஆத்திரமுற்ற சங்கர் உள்ளிட்டோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.  சங்கர் சரணடைந்ததை தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலையில் சம்பந்தப்பட்டவர் அதிமுக கிளை செயலாளர் என்று காவல்துறையினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளும், விழிப்புணர்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக நீதி காக்கும் மண்ணாக அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து சமூக நல்லிணக்கத்தை பேணி காக்க வேண்டும்.” என தெரிவித்தார். 


இதையடுத்து இளைஞர் ஜெகன் கொலையில் அதிமுக கிளை செயலாளர் சங்கருக்கு தொடர்பு என முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசியதால் சட்டப்பேரவையில் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.