அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி அந்த துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாகவழக்கு தொடரப்பட்டது.இதுதொடர்பாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இந்த சோதனையானது மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரின் பலத்த பாதுகாப்போடு நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து 17 மணி நேரம் நீடித்த சோதனை நள்ளிரவில் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாலை 2 மணிக்கு செந்தில் பாலாஜியை அதிகாரிகள் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அவர் கைது செய்து அழைத்து செல்லப்பட்டதாக சொல்லப்பட்டது. அப்போது திடீரென தனக்கு நெஞ்சுவலிப்பதாகவும், உடனடியாக மருத்துவர்களை அழைக்குமாறும் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
நெஞ்சு வலியால் கதறி அழுத அமைச்சர் செந்தில் பாலாஜி வீடியோ இணையத்தில் வைரலானது. உடனடியாக அவர் ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். மருத்துவமனை வளாகத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் தலைமைச்செயகத்தில் உள்ள செந்தில்பாலாஜி அறையில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் 3 பைகளில் ஆவணங்கள் எடுத்துச்செல்லப்பட்டது. இந்நிலையில் செந்தில்பாலாஜி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட வல்லுநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.