தூர்தர்ஷன் லோகோ கலர் மாற்றப்பட்ட விஷயத்தில் பாஜகவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். 


மத்திய அரசின் தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனின் லோகோ வண்ணம் மாற்றப்பட்ட சம்பவம் மிகப்பெரிய கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. சிவப்பு வண்ணத்தில் இருந்து காவி கலருக்கு மாற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் பாஜகவை கடுமையாக சாடியுள்ளது. தேர்தலில் வாக்குகளை கவர, பாஜக இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளது. 






இப்படியான நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், “உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்; தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்; வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்; பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்; தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்! தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்!” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


ஆனால் தூர்தர்ஷன் லோகோ வண்ணம் மாற்றப்பட்டது தொடர்பாக பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அலுவலர் கௌரவ் திவேதி, “லோகோ வண்ணத்தை மாற்றியதை பாஜகவுடன் தொடர்புபடுத்தி பேசுவது தவறானது. அது ஆரஞ்சு வண்ணமே தவிர காவி அல்ல” என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மமதா பானர்ஜி கண்டனம்


இதற்கிடையில் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், “தூர்தர்ஷன் லோகோ கலர் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளது சட்டவிரோதமானது. தேசிய ஊடகம் பாஜக ஆதரவாக செயல்படுகிறது. இதை எப்படி தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கிறது. உடனடியாக கலரை நீல நிறத்துக்கே மாற்ற வேண்டும்” என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.