சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் என்.சங்கரய்யா. இன்று அவருக்கு100வது பிறந்தநாள். இதையடுத்து, அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சங்கரய்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, குரோம்பேட்டையில் உள்ள சங்கரய்யா வீட்டிற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், மார்க்சிஸ்டு தலைவர் சீதாராயம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களும் இந்த சந்திப்பின்போது இருந்தனர்.
மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
“ பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தோழரும் தமிழக அரசியலில் மூத்த தலைவரும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க கால உறுப்பினருமான மதிப்புக்குரிய என்.சங்கரய்யா 100வது அகவை காணும் சிறப்பு மிக்க நாள் இன்று.
தமிழக அரசியல் தலைவர்களில் 100 வயதை தொட்டு, பொதுவாழ்வில் உள்ள அனைவருக்கும் வழிகாட்டும் தியாக வாழ்வுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார் சங்கரய்யா. சுதந்திர போராட்ட வீரராக, இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டக்களம் கண்டவராக, மாணவர்கள் அமைப்பை கட்டமைத்தவராக பொதுவுடைமை இயக்கத்தின் போராளியாக, ஜனசக்தி, தீக்கதிர் ஏடுகளில் பொறுப்பு வகித்த பத்திரிகையாளராக, மக்கள் உரிமைக்காக சங்கநாதம் எழுப்பிய சட்டப்பேரவை உறுப்பினராக, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழுச் செயலாளராக சங்கரய்யாவின் பொதுவாழ்க்கை பல்வேறு பரிமாணங்களை கொண்டது.
8 ஆண்டுகள் சிறைவாசம், 3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை என இன்னல்கள் இன்முகத்துடன் எதிர்கொண்டு, தியாகத்தின் அடையாளமாக விளங்கும் பொதுவுடைமை இயக்கத் தலைவர் சங்கரய்யா, திராவிட இயக்கத்துடன் மக்கள் நலன் சார்ந்து இணைந்து நின்றவர். தேர்தல் அரசியலில் தி.மு.க.வுடன் உடன்பட்டும் முரண்பட்டும் இருந்தாலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெருமதிப்புக்குரிய தலைவராவார்.
சாதி ஒடுக்குமுறை எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு, மதநல்லிணக்க முனைப்பு இவற்றுக்காக தலைவர் கருணாநிதியின் தலைமையிலான அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு உற்ற துணையாக அவர் நின்றதை மறக்க முடியாது. பொதுவுடைமை இயக்க கொள்கைகளில் உறுதிமிக்க சங்கரய்யா, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் சொத்தாக திகழ்கிறார்.
வாழும் வரலாறாக நூறாவது பிறந்தநாள் காணும் சங்கரய்யா, மேலும் பல்லாண்டுகள் நலமுடன் வாழ்ந்து என்னைப் போன்றவர்களுக்கும் பொதுவாழ்க்கை பயணத்தில் வழிகாட்டிட வேண்டும் என்ற அன்புடனும் ஆவலுடனும் நேரில் வந்து வாழ்த்தி, வாழ்த்துகளை பெற்றுக்கொள்கிறேன். மதிப்புக்குரிய மூத்த தோழர் சங்கரய்யாவின் தியாகத்தையும், எளிமையையும் போற்றுகிறேன். முதல்வர் என்ற முறையில் தமிழக மக்களின் சார்பில் நூற்றாண்டு வாழ்த்துகளை அவருக்கு வழங்கி மகிழ்கிறேன்.“
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும், மார்க்சிஸ்டு மூத்த தலைவர் சங்கரய்யா பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, தி.நகரில் உள்ள மார்க்சிஸ்டு தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியேற்றப்பட்டு விழாவாக கொண்டாடப்பட்டது. மேலும், மரக்கன்றுகள் நடும் விழாவும் நடைபெற்றது.